பனங்காடு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எட்டாம் நாள் சடங்குடன் இனிதே நிறைவு பெற்றது.


அக்கரைப்பற்று, பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா, எட்டாம் நாள் சடங்குடன் இன்று (03) சனிக்கிழமை இனிதே நிறைவு பெற்றது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பகுதியில் வயல் வளமும் நீர் வளமும் நிறைந்த தில்லையாற்றுக்கு அருகிலுள்ள சிவபூமி மண்ணில் கோவில் கொண்டு, மக்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தின் இவ்வருட உற்சவம் கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகியது.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு நிகழ்வு கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது பக்தர்கள் மஞ்சள் நீராடி தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அம்மனுக்குத் திருக்குளிர்த்தியும்  இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு, தில்லையாற்றில் தீர்த்தோற்சவமும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னை நாககாளி அம்மனின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று  இடம்பெற்ற எட்டாம் நாள் ஏனைய சடங்குகளுடன்   தீக்குழிக்குப் பால் வார்க்கும் சடங்கு நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜா ஐயா மற்றும் அக்கரைப்பற்று வீரம்மா காளியம்மன் ஆலய பிரதம குரு இ. யோகானந்தன் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஆலயப் பணிகளுக்கு பல்வேறு வழிகளிலும் சிறப்பாகப் பங்களிப்பு செய்தவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதனையடுத்து எட்டாம் நாள் சடங்குடன் பனங்காடு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.