சர்வதேச முதியோர் தினம் – 2026


“நீண்ட ஆயுள் காலம் – நீண்ட வாழ்க்கைக்கான அமைப்புக்களை மீளச் சிந்திப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், சர்வதேச முதியோர் தினம் – 2026 நிகழ்வு முதியோர் தேசிய செயலகம், திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் மூதூர் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில்  (01) மூதூர் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். இர்பான் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திருமதி எஸ். ஶ்ரீபதி ஆகியோரும், விசேட விருந்தினர்களாக மூதூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஐ.எம். தாஹீஸ், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். றொஷானா, மூதூர் பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். ஜெம்சித், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். றமீஸ், பிரதி அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் கே.எம். சப்றான், கிலின் ஶ்ரீரங்க திட்டத்தின் இணைப்பாளர் வீ.எம். றம்ஸி உள்ளிட்ட பல திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

குறிப்பாக, மூதூர், சேருவில, தம்பலகாமம், வெருகல், கிண்ணியா, கந்தளாய் மற்றும் பட்டினமும் சூழலும் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதியோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மும்மதத் தலைவர்களின் ஆசியும் இடம்பெற்றது. மேலும், முதியோர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலை நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கும் நிகழ்வில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது, பிரதம அதிதியான மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களுக்கு மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. அதேபோன்று மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், முதியோர் சமூகத்திற்காக ஆற்றி வரும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டி, மாவட்ட ஒருங்கிணைப்பு முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். இர்பான் அவர்களுக்கும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முதியோர்களின் அனுபவம், அறிவு மற்றும் சமூகப் பங்களிப்பை மதித்து, அவர்களுக்கான கண்ணியமானதும், மகிழ்ச்சியானதும், பாதுகாப்பானதுமான வாழ்க்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் சிறப்புமிக்க நிகழ்வாக சர்வதேச முதியோர் தினம் – 2026 அமைந்தது குறிப்பிடத்தக்கது.