திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திகோ/தங்கவேலாயுதபுரம் அ.த.க. பாடசாலையில் இம்முறை வாணி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. சி. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் ஆரம்பக்கல்வி மாணவர்கள் தங்களது கலைத்திறன்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, குறித்த பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், அவர்களிடையே தலைமைத்துவப் பண்புகள், தன்னம்பிக்கை மற்றும் ஆக்கத்திறன்களை வளர்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதிகஷ்டப் பாடசாலையாக விளங்கும் இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், பள்ளங்களும் படுகுழிகளும் நிறைந்த போக்குவரத்துக்கு இடையூறான பாதையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைக்கு வருகை தந்து தமது கல்விப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன், அவர்களது கலைத்திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அவர்களது ஆளுமை விருத்திக்கும் வழிவகுக்கும் இத்தகைய செயற்பாடுகள், அதிகஷ்டப் பாடசாலைகளின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினருக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

