அனோஜனின் சவூதி மேல்முறையீட்டு விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை குறித்து சாணக்கியன் கேள்வி


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனின் வழக்கில், மேல்முறையீட்டு நடைமுறையை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் தொடர்பில் அரசாங்கத்திடம் பதில்களைக் கோரவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த பதவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை, அம்பாறை மாவட்டம், நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மிக உயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், மேல்முறையீட்டு நடைமுறையை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் குறித்தும் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜனுக்கு ஆரம்பத்தில் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம், பேஸ்புக் பதிவொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் தண்டப்பணமும் விதித்திருந்தது.

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தது. அதேவேளை, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றிருந்த சட்ட ஆலோசனையில், தீர்ப்பை வெற்றிகரமாக மேல்முறையீடு செய்வதற்கான அல்லது தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பு “மிகவும் குறைவு” என மதிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, மதத் தலைவர்கள் அசல் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளைத் தனியாக முன்னெடுத்து வந்தனர். எனினும், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவைச் சந்தித்த பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சட்டச் செலவுகளுக்காகக் கோரப்பட்ட 1,890,766 ரூபா தொகையை, வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.

அமைச்சினால் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் திகதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குடும்பத்தினர் முன்னதாகவே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்ததாகக் கூறும் நிலையில், மேல்முறையீட்டு ஆவணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய அமைச்சின் கடிதம் 2026 செப்டெம்பர் 16ஆம் திகதியிடப்பட்டுள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டில் அட்டர்னி அட்லான் அப்துல்லா அல்-சுபை சட்டத்தரணியாகக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தச் சட்டத்தரணியின் பெயர் அல்லது தொடர்பு விபரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சின் ஆலோசனையைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய முன்வந்து, கோரப்பட்ட சட்டச் செலவையும் செலுத்தியுள்ள நிலையில், மேல்முறையீட்டைத் தொடர்ந்து அமைச்சின் பொறுப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகள் எழுவதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தூதரகத்தின் சட்ட ஆலோசனையில் மேல்முறையீட்டில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்தபோதும், குடும்பத்தினருக்கு ஏன் மேல்முறையீடு செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது?

அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது?

நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியைத் தேர்ந்தெடுத்தது யார்? அவருக்கு யார் அறிவுறுத்தல்களை வழங்கினர்?

தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் மேல்முறையீட்டு ஆவணங்களும் சட்டத்தரணியின் விபரங்களும் குடும்பத்தினருக்கு ஏன் வழங்கப்படவில்லை?

செலுத்தப்பட்ட 1,890,766 ரூபா எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?

இந்த விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் மேற்கொண்ட மேற்பார்வை நடவடிக்கைகள் என்ன?

அனோஜனின் வழக்கைக் கையாள்வதில் தூதரக அல்லது இராஜதந்திர ரீதியில் தவறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் அரசாங்கத்திடம் கேட்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 17ஆம் திகதி வெளியான செய்திகளின்படி, மேல்முறையீட்டின் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சவூதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ தீர்ப்பை அவசரமாகப் பெற்றுச் சரிபார்க்க வேண்டும் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கைக் கையாண்ட விதத்தில் பொறுப்பை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணைகள், அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான நீதிமன்றத் தீர்ப்பையும் வழக்கு நடவடிக்கைகளின் பதிவுகளையும் அவசரமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அனுபவமிக்க மற்றும் சுயாதீனமான சவூதி சட்டத்தரணி ஒருவரின் சட்ட உதவியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து மேல்முறையீட்டு மற்றும் மறுஆய்வு வழிகளையும் ஆராய்வதுடன், மனிதாபிமான அடிப்படையிலான மன்னிப்பு மற்றும் மரண தண்டனையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தேவையான பட்சத்தில் சவூதி அரேபிய இராச்சியத்தின் பொருத்தமான உயர்மட்டத்தில் தலையீட்டைக் கோர வேண்டும் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 “இந்த மேல்முறையீடு எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டிய தீவிரமான கேள்விகள் உள்ளன. இந்த விடயங்களை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் எழுப்பவுள்ளேன். அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய முன்வந்ததுடன், கோரப்பட்ட சட்டச் செலவுகளையும் செலுத்தியுள்ள நிலையில், குடும்பத்தினருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படுவதையும் அனோஜனுக்குப் போதுமான சட்ட உதவி கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

“எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரம் உடனடி முன்னுரிமையைத் திசைதிருப்பக் கூடாது. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தற்போது ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட, இராஜதந்திர, தூதரக மற்றும் மனிதாபிமான வழிகளும் தற்போது பயன்படுத்தப்பட வேண்டும். சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான மிக உயர்ந்த மட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.