இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (18) ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய–இலங்கை வர்த்தக மற்றும் நட்புறவு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், அனுசியா சேனாதிராஜா, திருக்கோவில் பிரதேச சபைத் தலைவர் எஸ். சசிக்குமார், எஸ். மணிவண்ணன், இந்திய–இலங்கை நட்புறவு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அசோகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், டட்டுக். சுந்தர் தலைமையிலான 40 இந்திய முதலீட்டாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், பொருளாதார முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் முதலீட்டு வாய்ப்புகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி, பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, தொழில் உற்பத்திக்கான தொழில் முறை பயிற்சிகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுத்து, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)