மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சனைக்கு அமைச்சர் நிரந்தர தீர்வு – பா. உறுப்பினர் கந்தசாமி பிரபு


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்கும்; பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் பிரதேச சபைகள் ஊடாக பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற தண்ணீருக்கு  செலவழிக்கும் நிதிகளை மீள் அழிப்பது தொடர்பாகவும் இருக்கும்  சுற்றுநிருபத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும் பிரதேச சபைகள் ஊடாக வழங்குகின்ற நீரை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் அதற்கான நிதியை அரசின் ஊடாக வழங்கப்படும்.

அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திரங்கள் வசதிகளை உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளார்.

அதேவேளை தற்போதைய நிலையில் தனியாரிடம் வாடகை அடிப்படையில் பவுசர் போன்ற விஷயங்களை பெற்றுக் கொண்டு தொடர்ச்சியாக நீரை வழங்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

எனவே இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் அவசிய பிரச்சனைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.

அதேவேளை முந்தனையாறு திட்டம் ஏ.எப்.பி. என்ற நிறுவனத்தின் மூலம் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட அந்த திட்டத்துக்கான காலம் நிறைவடைந்திருக்கின்றது அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதன் ஊடாக அது சாத்தியபாடா?  இல்லையா? என அறிந்து கொள்ள முடியும்.

இருந்தபோதும் அதையும் தாண்டி அரசின் நிதி ஊடாக முந்தனையாறு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரித்துள்ளதோடு இந்த திட்டத்தை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் உள்ள வாகனேரி குளத்துக்கு நீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதுடன் வாகனேரி, கட்டு முறிப்பு ஆகிய குளங்களை புனரமைப்பு செய்து நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யவுள்ளோம் அமைச்சரின் வருகையினால் மாவட்டத்துக்கான குடிநீரை பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது.