ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு 246.45 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டு இதில் 172.77 பேர்ச் காணி 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலைக்காக சுவீகரிக்கப்பட்ட மீதமுள்ள 73.65 பேர்ச் காணி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இக்காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(24) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 1912.10.01 அன்று ஆரம்பிக்கப்பட்டு, நூற்றாண்டுக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் ஒரு புகழ்பெற்ற தேசிய பாடசாலை. இவ்வாறான வரலாற்றுப் பெருமைமிக்க பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான நடவடிக்கைகளுக்கும் போதுமான காணி வசதி மிகவும் அவசியம்.
பாடசாலைத் தேவைக்காக 1912, 1921, 1928 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மூலம் மொத்தமாக 246.45 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரச வர்த்தமானிகள் மற்றும் நில அளவை ஆவணங்கள் உள்ளன. இதில் 172.77 பேர்ச் காணி 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலைக்காக சுவீகரிக்கப்பட்ட மீதமுள்ள 73.65 பேர்ச் காணி இதுவரை பாடசாலைக்கு வழங்கப்படவில்லை.
அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் நிலையமும் இப்பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான அரச நிறுவனமாகும். எனவே, பொலிஸ் நிலையத்திற்கும் நிரந்தரமான சட்டபூர்வமான காணி மற்றும் தேவையான கட்டட வசதிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
1925 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 6006 ஆம் இலக்க நிலவரைபடம் மற்றும் 2016.12.13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிலவரைபடம் ஆகியவற்றிலும் குறித்த காணி அரச காணியாகவும், பாடசாலைத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை அடிப்படையாகக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பெயரில் முற்பதிவற்ற உறுதி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் காணப்படுகிறது. மேலும், 2025.02.03 அன்று 73.65 பேர்ச் காணியை அளவிடச் சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இந்தப் பிரச்சினை இனியும் காலதாமதப்படுத்தப்படாமல் மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது பாடசாலைக்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான மோதலாகக் கருதப்படக்கூடாது. மாறாக, பாடசாலைக்கு அதன் சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்ட காணி கிடைப்பதையும், பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தரமான காணி மற்றும் கட்டட வசதிகள் கிடைப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் காணி சுவீகரிப்பு பதிவுகள் மற்றும் நில அளவை ஆவணங்களின் அடிப்படையிலும் இந்த வரலாற்றுப் பெருமைமிக்க தேசிய பாடசாலையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டும் 73.65 பேர்ச் காணியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு சட்டரீதியாக வழங்குவதற்கு தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அதன் பிரகாரம் பின்வரும் கேள்விகளுக்கு முறையான பதிலை எதிர்பார்க்கிறேன்.
பாடசாலைத் தேவைக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 246.45 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?ஏற்கனவே அரசாங்கத்தினால் பாடசாலைத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட அரச காணியை அடிப்படையாகக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பெயரில் முற்பதிவற்ற உறுதி தயாரிக்கப்பட்டதற்கான சட்டபூர்வ அதிகாரம் என்ன?
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் காணி சுவீகரிப்பு பதிவுகள் மற்றும் நில அளவை ஆவணங்களின் அடிப்படையிலும் பாடசாலையின் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டும் 73.65 பேர்ச் காணியை பாடசாலைக்கு சட்டரீதியாக வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார்.
