ஏறாவூர் நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்குச் சென்றபோது அங்கிருந்த மேற்பார்வையாளர் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஏறாவூர் நகரசபையின் பிரதித் தவிசாளர் ஞாபானந்தன் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
நகரசபையின் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சட்டவிரோதமாக மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு கள விஜயம் மேற்கொண்டு காணொளி பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். இதன்போது, அங்கு வந்த கழிவு முகாமைத்துவப் பொறுப்பாளர், காணொளி எடுப்பதைத் தடுத்து தன்மீது தாக்குதல் நடத்தி தொலைபேசியைப் பறிக்க முயன்றதாகவும், பின்னர் தான் அங்கிருந்து தப்பிச் சென்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்தே முஸ்லிம் காங்கிரஸக்கு ஆதரவளித்துத் தவிசாளரை அரியணையில் ஏற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது, குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, வடிகான் அமைப்பது, கருமாரியம்மன் கோவிலடி மக்களுக்கு காணி உரிமை வழங்குவது உட்பட 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி குப்பைக் கழிவுகளை ஏறாவூர் பற்றில் உள்ள கொடுவாமடு கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பாமல், தவிசாளர் வாவிக் கரையோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் தொடர்ந்து கொட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
வாவிக் கரையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடை செய்யக் கோரி சபை அமர்வில் தான் பிரேரணை கொண்டு வந்த நாளில் இருந்து, தனது பிரதித் தவிசாளர் அறையின் பெயர் பலகை அகற்றப்பட்டு, தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நகரசபையில் உள்ள தமிழ் உறுப்பினர்களும் மக்களுக்கான இந்தப் பிரச்சினையில் தனக்கு ஆதரவு வழங்காமல் எதிர்ப்பை வெளியிட்டது மனவேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதோடு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.
தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் கௌரவ ஆளுநருக்கு எழுத்து மூலம் முறையிடவுள்ளதாகவும், தனக்குத் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதித் தவிசாளர் கஜேந்திரன் வலியுறுத்தினார்.
.jpeg)