நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 73 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுதழுவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) வரையான காலப்பகுதியில் சுமார் 96 ஆயிரத்து 228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் ஜூலை மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்தவகையில் அம்மாதம் 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, ஜூன் மாதம் 21,533 பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் 10,155 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு இம்மாதத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 737 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மேல் மாகாணத்தில் 50,851 (52.84 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 13,950 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உட்பட கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது.
நோயாளர் அதிகரிப்போடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 73 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 76 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
