2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. இம்முறை 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதுடன், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் 91.8 ஆக பதிவாகியுள்ளது. இம்மகத்தான சாதனையை முன்னிட்டு திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டி வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
பெருமதிப்பிற்குரிய நமது வலயத்தின் அதிபர்களே, ஆசிரியர்களே 2026 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி திருக்கோவில் கல்வி வலயம் இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையை நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள் என்பதை பெரும் மகிழ்வோடு இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.
169 மாணவச் செல்வங்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் 91.8 ஆக உள்ளது.
இது சாதாரண சாதனை அல்ல அபரிதமான உங்கள் அர்ப்பணிப்புக்கு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி., இதற்காக அரும்பாடுபட்ட ஆசிரியர் பெருந்தகைகளுக்கு தலை வணங்குகிறேன், அவர்களை வாழ்த்தி பாராட்டுவதோடு இதை சரியான முறையில் திட்டமிட்டு வழி நடத்திய அதிபர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இம் மகத்தான சாதனைக்கு பின்புலமா நின்று இரவு பகல் பாராது அரும்பணியாற்றிய நமது வலயத்தின் ஆரம்பக் கல்வி பிரிவிற்கான பிரதி கல்வி பணிப்பாளர் திரு அம்ஜத் கான் அவர்களுக்கும், கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளர் ஜனாப் நசீர், பொது முகாமைத்துவ பணிப்பாளர் திரு. சுரனுதன்இகல்வி திட்டமிடல் நௌபடின், கல்வி நிர்வாக பணிப்பாளர் திரு.நபீஸ், கணக்காளர் திரு லிங்கேஸ்வரன், கோட்டக்கல்வி பணிப்பாளர்களான திரு கங்காதரன், திரு. செல்வம், திரு .T. உதயகுமார், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர்களுக்கும் மற்றும் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், இதற்காக உழைத்த பெற்றோர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும், கல்வி உலகில் மகத்தான சாதனைகளை புரிந்து வருகின்ற உங்கள் அனைவரதும் சேவையும் ஆற்றலும் தொடர்ந்து பெருக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்து, திருக்கோவில் கல்வி வலயம் மேலும் மேலும் சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
