மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் ஆலய உற்சவம் ஒன்றின்போது மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பழுகாமம் மகா விஷ்ணு ஆலய உற்சவ நிகழ்வின் போது திடீரென மயங்கிவீழ்ந்த நிலையில், அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்திருந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் 2018 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று, போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்காகவும் அப்பிரதேசத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றியவர். மேலும், பழுகாமம் மகா விஷ்ணு ஆலயத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து, பல்வேறு ஆன்மீக பணிகளை முன்னெடுத்திருந்தார்.
பழுகாமம் வட்டார மக்களின் பிரதிநிதியாக நின்று, பிரதேசத்தின் பல்வேறு பொதுநலப் பணிகளிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் முன்நின்று செயலாற்றிய இவரது திடீர் மறைவு பழுகாமம் பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் அவரது வீட்டில் உள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை பழுகாமம் பொதுமயானத்தில் அவரது உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)