போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (15) வெல்லாவெளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, நவகிரி மற்றும் தும்பங்கேணி நீர்ப்பாசனப் பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை மற்றும் மானாவாரி வயல் நிலங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இம்முறை 21,058 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. விவசாயிகளின் விதைப்புக்காக BG 97-1, AT 307, BG 251, BG 360, BG 366, BG 357, AT 378 மற்றும் BG 374 ஆகிய நெல் இனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன் போது செப்டெம்பர் 20ஆம் திகதி வயல் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒக்டோபர் 20ஆம் திகதி விதைப்பு ஆரம்பிக்கப்படுவதுடன், நவம்பர் 5ஆம் திகதி விதைப்பு பணிகள் நிறைவுசெய்யப்படவுள்ளன.

2027 பெப்ரவரி 15ஆம் திகதி அறுவடைப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் எஸ்.யோகராஜா, மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன், உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதீன், துறைசார் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.