மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு வாகன தரிப்பிடமும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு குடிநீர் விநியோக தொகுதியும் வழங்கிவைப்பு.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு வாகன தரிப்பிடமும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மக்கள் நலன் கருதி குடிநீர் விநியோக தொகுதியும் மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தினால் அமைத்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரனின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தினால்  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எந்த நேரத்திலும் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வகையில் குடிநீர் வழங்கும் உபகரணம் ஒன்று நேற்று(15.09.2026) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பகல், இரவு என எந்த நேரத்திலும் வருகை தருவதால், அவர்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு இவ்வுபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வருகை தரும் நோயாளிகள், உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் தேவையான நேரங்களில் சுத்தமான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு, புதிய வாகனத் தரிப்பிடம் ஒன்றும் லயன்ஸ் கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ்விரு சமூக நலத்திட்டங்களும் மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர் லயன் சஜன் செல்லையா அவர்களின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா. நவீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் க. லோகேந்திரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், உதவி வைத்தியசாலை பணிப்பாளர், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் இக்பால், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை அதிகாரிகள், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் சபை அதிகாரிகள், பல்வேறு லயன்ஸ் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விரு செயற்திட்டங்களும் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

“நாங்கள் சேவை செய்கிறோம்” என்ற லயன்ஸ் கழகத்தின் உயரிய கொள்கைக்கு அமைவாக, சமூக நலனை முன்னிறுத்தும் இத்தகைய மனிதாபிமான சேவைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.