ACTED நிறுவனத்தின் மீள்திறன் கொண்ட சூழலை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்


காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரச் சூழலை மீளுருவாக்கம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகளைத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (15) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட தரவுகள் தொடர்பில் இதன்போது விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர உயிர்பல்வகைமையை மீளுருவாக்கம் செய்வதுடன் கரையோர சமூகங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ACTED நிறுவனத்தினால் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுற்றாடல் அமைச்சு இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது துறைசார் நிபுணர்களின் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் களப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைவடைந்து வருகின்றமை  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்  நீரோட்டத்தினால் ஏற்படும் தாக்கங்கள், ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கரையோரப் பகுதிகளில் இயற்கை வாழிடங்களை மீளுருவாக்கம் செய்து, மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று வருட செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ரீ. மதிவேந்தன், கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிக்குமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், ACTED நிறுவனத்தின் நாட்டுக்கான இணைப்பாளர் எம். சுதர்சன், திட்ட ஒருங்கிணைப்பாளர் எச். எம். தாஜுல் பலாஹ், துறைசார் நிபுணர்கள், திணைக்கள தலைவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், Inno Consultant services  உயர் அதிகாரி தர்மேந்திரா,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.