திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் ரூ. 4,185 மில்லியன் செலவில் புதிய இருதயவியல் பிரிவு


திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் மொத்தம் ரூ. 4,185 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய இருதயவியல் பிரிவின் கட்டுமானப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (16) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக, கட்டுமானப் பணிகளுக்கு  ரூ. 2,403 மில்லியனும், மருத்துவ உபகரணங்களைப் பெறுவதற்கு ரூ. 1,782 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், எட்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. இதில் நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், புறநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள், உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த மதத் தலைவர்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற வான் படைத் துணைத் தளபதி சம்பத் துயகொந்த, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி ஷிகியோ ஹொன்சு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, அரசாங்க அதிகாரிகள், மருத்துவமனைப் பணிப்பாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.