புகையிரத திணைக்களத்தில் நிர்வாக கட்டமைப்பில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கோரியும், திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று (16) புதன்கிழமை நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
26 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்டத்தினால் நேற்றைய தினம் இரவு தபால் சேவையில் ஈடுபடவிருந்த 06 புகையிரதங்கள் சேவையில் இருந்து இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினமும் அதிகளவிலான புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.
முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் புகையிரத திணைக்களத்துடன் தொடர்புடைய சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும்இ இந்த போராட்டம் தொடர்பில் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமரஇ புகையிரத தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடினார்.இதற்கமைய 26 தொhழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
புகையிரத திணைக்களத்தில் நிலவும் நிர்வாக கட்டமைப்பின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.
இது தொடர்பில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் ஜயசேகர,
புகையிர திணைக்களத்தின் விடயதானத்துடன் தொடர்பில்லாத நபரே பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முறையற்ற செயற்பாடுகளினால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக இவரை பதவி நீக்கி, புகையிரத சேவை தொழிற்றுறையுடன் தொடர்புடைய நபரை பொதுமுகாமையாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம்' என்றார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் 26 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளரை பதவி நீக்க முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாக அறிவிருத்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் 26 புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சங்க போராட்டத்தினால் புகையிரத நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
