நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை தொடர்பில் அம்பர் நிற எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்


சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (03) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (04) செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் காற்றுடனான வானிலை  நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் வீசக்கூடிய பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.