நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு காய்ச்சிலினால், வாதுவை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவரும் அவரது 07 மாதக் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
கடும் காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் 86,386 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சிலினால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக சுமார் 30,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 1,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் மொத்தப் பாதிப்பில் பாதியைக் கொண்டுள்ள மேல் மாகாணத்தில் 45,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 18,321 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 17,101 பேரும், தென் மாகாணத்தில் 12,969 பேரும் மற்றும் மத்திய மாகாணத்தில் 7,567 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் பருவமழையினால் நுளம்புகள் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
