உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைவு -மறு அறிவித்தல் வரை தினமும் நீர்வெட்டு -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

" தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைவதன் காரணமாக நீர் நாளைமுதல்( 22.08.2026) மறு அறிவித்தல் வரை தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்- தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிவமைப்புச் சபை, மட்டக்களப்பு பிராந்தியம்". --- :-செய்தி

இந்த செய்தி சாதாரண செயதியல்ல. எதிர்வுகூறப்பட்ட எல்நினோ தீவிரமடைந்து வருவதாலும் மற்றும் எங்கள் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள சமுத்திரப் பகுதிகளிலும் நிலவும் வெப்பமான வானிலைத் தோற்றப்பாடுகளின் விளைவுகளின் ஆரம்பம்.
கடந்த 90 நாட்களில் (மே மாதம் 20ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20ம் திகதி வரை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாகவே 24 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் 493 மி.மீ. நீர் ஆவியாகி உள்ளது.
மிக அண்மித்த நாட்களில் சற்றுக் கனமான வெப்பச்சலன மழைக்கும் வாய்ப்பில்லை.( ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவிலான மழைக்கு வாய்ப்புண்டு).
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதியை அண்மித்தே இரண்டாவது இடைப்பருவ மழை தொடங்கும் வாய்ப்புள்ளது. அதுவும் இரண்டாம் இடைப்பருவ மற்றும் வடகீழ்ப் பருவ மழை எவ்வாறு அமையும் என்பதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரமே உறுதிப்படுத்த முடியும்.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சற்று அதிக அளவில் வெப்பநிலை நிலவுகின்றது. ஆனால் வரண்ட தென்மேற்கு பருவக்காற்று வீசுவதனால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சற்று குறைவாகவே உள்ளது.
ஆனால் அதிக வெப்பநிலையும் வேகமான காற்று வீசுகையும் அதிக ஆவியாக்கத்தினைத் தூண்டும். குறிப்பாக வேகமான காற்று வீசுகை அதிக ஆவியாக்கத்திற்கு காரணமாகும்( டால்ரன் விதி- Dalton's Law of Evaporation).
இதனால் எமக்கு தெரியாமலே எங்கள் பிரதேசங்களில் அதிக நீரிழப்பு நிகழ்கின்றது.
அதே வேளை இக்காலத்திலேயே நாம் அதிக நீரைப் பயன்படுத்துகின்றோம்.
பெருமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் காலம் வரை ( கிட்டத்தட்ட எதிர்வரும் ஒக்டோபர் 12... அதாவது இன்னமும் ஏறக்குறைய 52 நாட்களுக்கு) எங்களிடம் தற்போது உள்ள நீரையே நாம் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே நீரை வினைத்திறனாக பயன்படுத்தி நாம் நீர் நெருக்கடியைத் தவிர்ப்போம். கடந்த காலங்களில் உலகின் சில முக்கியமான நகரங்கள்( பெங்களூரு மற்றும் ஜோகன்னஸ்பேர்க்) இவ்வாறு தொடர்ச்சியான மழையற்ற தன்மை, அதிக ஆவியாக்கம், நீர்ச்சேமிப்பைக் கருத்தில் கொள்ளாத பயன்பாடு காரணமாக நீரற்ற நாட்களைக்( Zero Water Day) கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாம் அத்தகைய நிலைமைக்கு செல்வதற்கு முன்னரே விழித்திடுவோம்.
1. அன்புக்குரிய வர்த்தகர்களே!!! பெருமழை ஒன்று கிடைக்கும் வரை தயவு செய்து உங்கள் வணிக நிலையங்களை குளிர்மைப்படுத்த அதிகளவிலான நீரை உங்கள் வணிக நிலையங்களுக்கு முன்னே ஊற்றி வீண் விரயம் செய்யாதீர்கள்...
2. கட்டுமானதாரர்களே!!! நீரை அதிகளவு நுகரும் கட்டுமான வேலைகளை பெருமழை ஒன்று கிடைக்கும் வரை நிறுத்தி அல்லது மட்டுப்படுத்தி நீரை சேமியுங்கள்
3. பெருமழை ஒன்று கிடைக்கும் வரை உங்கள் வீட்டுக் கிணறுகளை இறைத்து சுத்தப்படுத்தும் வேலைகளை ஒத்திப்போடுங்கள்.
4. விவசாயிகளே!!! நீர் அதிகளவில் ஆவியாகக்கூடிய நேரங்களில் உங்கள் கிணற்று நீரை இறைத்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சாதீர்கள்.
5. பக்தர்களே!!! உங்கள் ஆலயங்களின் கேணிகளின் நீர் ஏற்கெனவே குறைந்த மட்டத்திலேயே உள்ளமையால் தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு ஆலயக் கேணிகளைத் துப்புரவாக்கும் போது நீரை இறைத்து வெளியேற்றாமல் தூர்வாருங்கள். ஆலயக் கேணியில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களை அகற்றுங்கள். ஏனெனில் பல இடங்களில் ஆலயக் கேணிகளே அவற்றின் கட்டமைப்புக் காரணமாக தரைக்கீழ் நீரைச் சேமிக்கும் பிரதான மூலங்களாக தொழிற்படுகின்றன.
எனவே அன்புக்குரிய மக்களே....வானிலை வரட்சியொன்றில் நாம் உள்ளோம்.... எங்கள் நீர்வளம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்... நீரை மிகவும் வினைத்திறனாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துங்கள்....
- நாகமுத்து பிரதீபராஜா -