களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நிலவும் மழைவீழ்ச்சி மற்றும் களனி ஆற்றுப் படுகையில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்மானித் தரவுகளின் பகுப்பாய்வுகளுக்கு அமையவே இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ள நிலைமை உருவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி தொடர்ந்து பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்றின் நீர்மட்டம் அதிவேகமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆற்றினைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தேவையான அனைத்து முன்ஆயத்த மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனர்த்த மேலாண்மை அதிகாரிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.