துறைமுகங்கள், சிவில் விமானசேவைகள் மற்றும் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, நேற்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு எண்ணெய் தாங்கித் தொகுதி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆராய்ந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இதுவரை இரண்டு எண்ணெய் தாங்கிகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், எண்ணெய் சேமிப்பு நடவடிக்கைகளுக்கு உகந்த வகையில் மேலதிகமாக மூன்று தாங்கிகளைப் புனரமைப்பதற்கான கேள்விக்கோரல் விடப்பட்டுள்ளாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்கு வரும் பெரிய கப்பல்களில் இருந்து இறக்கப்படும் எண்ணெய்யை நேரடியாக இந்தத் தாங்கிகளுக்கு விநியோகிப்பதற்காக குழாய் அமைப்பொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டு, தற்போது அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான மிதவையிலிருந்து இக்குழாய் அமைப்பை விஸ்தரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கும்போது, குறித்த பிரதேசத்தில் இயங்கும் பல்வேறு தரப்பினருடன் இணக்கப்பாடுகளை எட்ட வேண்டிய தேவை எழுந்தது. இதனை அடிப்படையாகக்கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும், ப்ரீமா நிறுவனம், புகையிரத திணைக்களம் மற்றும் சுற்றாடல் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இவர்களுடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ள மொத்தம் 81 எண்ணெய் தாங்கிகளில், 29 தாங்கிகளை நவீனமயமாக்கி பாரியளவில் எண்ணெய்யை சேமித்து, அதனை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மத்திய நிலையமாக மாற்றி, நாட்டுக்கு பெரும் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள உத்தேசிக்கப்பட்டது .
இந்த இக்கலந்துரையாடலில், புதிய குழாய் அமைப்பை நிறுவுவதற்கு அனைத்துத் தரப்பினரும் இனங்கியதுடன் விசேடமாக ப்ரீமா நிறுவனமும் தனது தனது இணக்கப்பாட்டை தெரிவித்திருந்ததாகவும் அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


