அரசினால் முன்மொழியப்பட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சட்டமூலத்தினை நிறைவேற்றாமல், ஏற்கனவே இருக்கின்ற பழைய சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.,
அரசினால் முன்மொழியப்பட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான சட்டமானது திருத்தியமைக்கப்பட்டு, இந்த சட்டமானது 1980ஆம் ஆண்டு 31ஆவது இலக்க சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சட்டமாக இப்போது வரையிலும் நடைமுறையிலிருந்து கொண்டிருக்கின்றது.
இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் சில தீர்மானங்களை எடுத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு முனைந்தவர்கள். அந்த நேரத்தில் சிவில் சமூகமாக 2018ஆம் ஆண்டு, 23ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டு மற்றும் 2025ஆம் ஆண்டு அளவுகளில் இதில் இருக்கிற பிரச்சினைகள் தொடர்பாக அப்போது இருந்த அரசுகளுக்கு இது சம்பந்தமான சில விரிவான அறிக்கைகள் கொடுக்கப்பட்டு, அது வர்த்தமானிப்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்இ தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற அரசானது அந்த சட்டத்தினை மீண்டும் சில திருத்தங்களோடு கொண்டு வந்திருந்தாலும், அது இன்னும் மிக மோசமான சில பாதிப்புகளை நிறுவனங்களுக்கு அல்லது சமூக சேவை செய்யும் அமைப்புகளுக்கு உருவாக்குவதாக நாங்கள் உணர்கின்றோம்.
பொதுவாகவே ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமாக இருந்தால் அடிப்படையில் மூன்று விடயங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஒன்று, சட்டம் உருவாக்கப்படும் நடைமுறை நியாயமானதாகவும், பங்குதாரர் ஆலோசனையுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். அது அந்த மாதிரி இந்த சட்டம், பில் கொண்டு வரும் பொழுது அது அப்படி நடைமுறை பின்பற்றப்படவில்லை.
மற்றது, சட்டத்தின் அவசியத்தன்மை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். சில இடங்களில் அந்த மாதிரியான உறுதியான தன்மை இப்போது கொண்டுவந்திருக்கிற வரைவில் இல்லை. மற்றது, சட்டத்தில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு இடையே விகிதாசார சமநிலை இருத்தல் வேண்டும். அந்த மாதிரியான ஒரு நிலைமையும் தற்சமயம் காணப்படவில்லை.
எனவே, ஏற்கனவே இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் பொழுது குறிப்பாக சொல்லப்பட்ட விடயங்கள் பண மோசடி, மற்றது பயங்கரவாத தடுப்பு சம்பந்தமான விடயங்களுக்காகத்தான் நாங்கள் இந்த சட்டங்களை திருத்தியமைக்க இருக்கின்றோம் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
ஆனால், பண மோசடி தொடர்பாகவோ அல்லது பயங்கரவாதம் தொடர்பாகவோ நிதி மோசடிகள் செய்வதாக இருந்தால் அதற்கென்று தனித்தனி சட்டங்கள் இருக்கின்றது. அந்த சட்டங்கள் இருக்கும் பொழுது மேலும் இன்னுமொரு சட்டத்தின் ஊடாக அதனை கையாள வேண்டும் என்று கொண்டு வருவது, அது தனிநபர் குழுக்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குவதாகத்தான் இருக்கின்றது.
அந்த என்.ஜி.ஓ. காரியாலயம் ஒன்று உருவாக்குவதற்கு முதல் நேரடியாகவே இந்த சட்டத் திருத்தம் மூலமானது ஒரு அமைச்சுக்கு கீழே செல்ல இருப்பதாக இப்போது உள்ள வரைவின் படி ஒரு அமைச்சர் பொறுப்பாக இருப்பார் என்றும், அந்த அமைச்சர் ஒருவரை நியமிப்பார்; அவர் ஒரு பணிப்பாளராகவோ, அதிகாரம்பெற்ற நபர் ஆகவோ இருப்பார்; அவருக்கென்று திரும்ப ஒரு அலுவலகமும், அதற்குள் அவருக்கு அந்த பணிகளை மேற்கொள்வதற்கான ஊழியர்களையும் அவர் நியமிப்பார் என்பதுதான் இந்த சட்ட வரைவில் சொல்லப்படுகிறது.
ஆனால், அந்த ஒரு நிறுவனங்கள், சிவில் சமூகங்கள் சார்ந்த ஒரு வேலைத்திட்டத்தினை இவர்கள் கையாளும் பொழுது மேலும் மேலும் ஏற்கனவே இருக்கிற சட்டங்கள் மீறப்படுகிறதா அல்லது அந்த சட்டத்துக்கு ஒரு அதிகாரங்கள் குறைக்கப்படுகிற போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.
இந்த சட்டம் தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் இருக்கும் பொழுது எல்லையற்ற சட்டங்களை கொண்டு வர்றது என்றது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது.
ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு தடவை இது சட்டம் எப்போது பதிவு செய்யப்பட்டது என்றால் ஒரு நிறுவனம், அந்த நிறுவனம் மூன்று வருடத்திற்கு ஒரு தடவை மீண்டும் மீண்டும் மீளப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரு விடயம் சொல்லப்படுகிறது.
அதில் குறிப்பிட சில விடயங்கள், அதாவது அவர்கள் வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படா விட்டாலோ அல்லது போனால் ஏதாவது ஒரு அவர்கள் சொல்லியிருக்கின்ற ஒழுக்க விதிமுறைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படவில்லை என்றால், அந்த அதிகாரி நினைத்தால் ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனத்தை தடை செய்யக்கூடிய அதிகாரமும் இங்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
எனவே, அது எதிர்காலத்தில் தனியான ஒரு சுய விருப்பத்தின் அடிப்படையில் அல்லது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் அந்த சிவில் சமூகங்கள், அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை அதிகமாக காணப்படுகிறது.
மற்றது, அந்த விடயங்களுக்கு அப்பால் ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளை, ஒரு நிர்வாக ரீதியாக ஏதாவது, ஒரு அந்த அதிகாரி ஒருவர் அந்த நிறுவனத்திற்குள் வந்து பார்க்க வேண்டுமாக இருந்தால் ஒரே ஒரு அறிவித்தலுடன் அவர் நேரடியாக உள்ளே வந்து அங்கிருக்கிற தளபாடங்கள், அங்கிருக்கின்ற கணக்கறிக்கைகள், அங்கிருக்கின்ற வங்கி கணக்குகள் எல்லாவற்றையும் அவர் பார்வையிட முடியும். ஒரு ஒரு தொலைபேசி மூலமாக ஒரு அழைப்பேற்படுத்திவிட்டு வரலாம். அதற்கான கால அவகாசம் என்றது என்றுமே இங்கு குறிப்பிடப்படவில்லை.
எனவே, இந்த மாதிரியான விடயங்கள் வந்து முழுமையாகவே சுயாதீனமான ஒரு அமைப்பாக தொடர்ச்சியாக இயங்க முடியாத ஒரு நிலையையும், சிவில் சமூகத்திற்கும் அரசிற்கும் இடையில் ஒரு பெரிய ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் விடயமாகவும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இந்த மாதிரியான சட்டங்களில் ஏற்கனவே இந்த அரசு சாரா தொண்டு நிறுவனமாக இருந்த இந்த அமைப்பு, இனிவரும் இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக நிறுவனங்களுக்கான ஒரு சட்டமாக கொண்டு வரப்படுகிறது.
எனவே, ஒரு ஐந்து நபருக்கு மேற்கொண்டு ஒருவர் ஒரு ஏதாவது ஒரு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமாக இருந்தாலும் அது ஏற்கனவே முன்கூட்டி திட்டமிடப்பட்டதாகவும், அவர்களிடம் அனுமதி பெறப்படும் விடயமாகவும் இருக்கும் பொழுது அனர்த்தங்களோ அல்லது போனால் அவசரமான சேவைகள் நிமித்தமாகவோ ஏதோ ஒரு சமூக சேவை தாங்களாகவே தன்னார்வமாக முன்வந்து செய்வது போன்ற காரியங்கள் வந்து இனிவரும் காலங்களில் அதை மிகவும் ஒரு பின் தங்ஙின ஒரு நிலையில் ஏற்படக்கூடிய மாதிரிதான் இந்த சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது.
எனவே, ஏற்கனவே இருக்கின்ற நாட்டின் முதன்மையான அரசியலமைப்பு யாப்பை மீறும் வகையிலோ அல்லது போனால் அதை பலவீனப்படுத்தும் வகையிலோ இன்னுமின்னும் சட்டங்களை புதிதாக கொண்டு வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே இருக்கிற சட்டமாக இருக்கின்ற 1980ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 31ஆவது இலக்க சட்டத்தின் கீழ் சமூக சேவைகள் அமைச்சின்கீழ் இருந்த மாதிரியான ஒரு செயல்பாடு தொடர்ச்சியாக இருப்பதைத்தான் சிவில் சமூகமாகிய நாங்கள் விரும்புகிறோம்.
எனவே தயவு செய்து இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றாமல், ஏற்கனவே இருக்கின்ற பழைய சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசை நாங்கள் விநயமாக கேட்டுக்கொள்கிறோம்.
