மட்டக்களப்பு - வெல்லாவெளி 35 ஆம் கொலனிப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மாயமாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக வெல்லாவெளி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் பொலிஸாரை முற்றுகையிட விடாமல் தடுத்து, பொல்லுகளால் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடி சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலை நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். மேலும், பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்பவ இடத்திலிருந்து காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸ் படையினர் வரவழைக்கப்பட்டு, தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்யவும்இ காணாமல் போன மோட்டார் சைக்கிளை மீட்கவும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
