மட்டு போதனா வைத்தியசாலையில் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் செயலிழப்பு - நோயாளர்கள் பெரும் அசௌகரியம்


மட்டு போதனா வைத்தியசாலையில் புற்றுநோயாளர் பிரிவில் இயங்கி வந்த லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் செயலிழந்துள்ள நிலையில், வைத்தியசாலைக்கு வருகை தரும் புற்றுநோயாளர்கள் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழியின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இயந்திர செயலிழப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (6) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவில் இயங்கி வந்த லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் கடந்த திங்கட்கிழமை (3) முதல் செயலிழந்துள்ளது. குறித்த இயந்திரத்தின் மூலம் நாளாந்தம் 60 நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஆகையால் தற்போது இயந்திர செயலிழப்பு காரணமாக புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை உரியவாறு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் நோயாளர்களும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு சில நோயாளர்கள் கதிரியல் சிகிச்சைக்காக கொழும்பு, மாத்தறை, காலி, கண்டி மற்றும் பதுளை போன்ற வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அத்தோடு மஹரகம அபேக்ஷா தேசிய புற்றுநோய் வைத்தியசாலையிலிருந்த 4 லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரங்களில் ஒன்று கடந்த மாதம் செயலிழந்ததோடு, குறித்த இயந்திரமும் இதுவரை பழுதுபார்க்கப்படவில்லை. புற்றுநோயாளர்களுக்கான கதிரியல் சிகிச்சைகளை உரிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக வழங்குவது அவசியம்.

ஏற்கனவே சிகிச்சைக்காக முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட நோயாளர் காத்திருப்புப் பட்டியல் பல மாதங்களுக்கு நீண்டுள்ள நிலையில், இயந்திர செயலிழப்பு காரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மேலும் தாமதமடையக்கூடும்.

ஆகையால் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு இவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இயந்திரங்களைப் பழுதுபார்ப்பது அவசியம் என்றார்.