ஒவ்வொரு ஊரிலும் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சிறைச்சாலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இந்து சமய சமய அறறெி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பிள்ளைகள் நல்ல ஒழுக்கமும் மனிதநேயமும் கொண்டவர்களாக உருவாக அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு மனிதன் சமூகத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரஜையாக வளர்வதற்கு அறநெறிக் கல்வி இன்றியமையாதது.
எனவே, பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் தலையாய கடமையாகும். எந்தவித பெரிய கொடுப்பனவும் இன்றி, பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் சமயக் கல்வியைப் போதிக்கும் அறநெறி ஆசிரியர்கள் வெறும் ஆசிரியர்கள் அல்லர், அவர்கள் சமூகத்தைச் செதுக்கும் சிற்பிகள். அவர்கள் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நமது சமயத்தின் தொன்மையையும் உண்மைத் தன்மையையும் அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல அறநெறிக் கல்வியை வலுப்படுத்த வேண்டும்.
மேலும், இந்து மக்களைச் சரியாக வழிநடத்தக்கூடிய நேர்மையான தலைமைத்துவம் உருவாவது காலத்தின் கட்டாயமாகும். முழு இலங்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு தலைமைப் பீடம் உருவாக வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பயணித்தால் மட்டுமே எமது மதத்தின் தொன்மையைப் பாதுகாக்க முடியும். தவறினால் எமது அடையாளம் மறைந்துவிடும் என்றார்.
