மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், நெல்லிக்காடு ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றிப் பாழடைந்து காணப்படும் வளவுக் காணிகளால் பொதுமக்கள் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இக்காணிகளில் காடு போல் வளர்ந்துள்ள அடர்ந்த புதர்கள் காரணமாக நச்சுப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, காட்டு யானைகளும் இவற்றை மறைவிடமாகக் கொண்டு இலகுவாகக் கிராமங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.
மேலும், மழைநீர் மற்றும் கழிவுகள் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு நோய் பரவும் அபாயமும் தீவிரமடைந்துள்ளது.
அதிகாரிகளின் விசேட கள விஜயம்.!
இப்பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் விடுத்த அவசர கோரிக்கைகளுக்கமைய, நேற்று (01.08.2026) ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் தலைமையில் விசேட கள விஜயமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
பாலையடிவட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சிவபாலன் ஜீவிதன்
அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், கிராம உத்தியோகத்தர் திருநாவுக்கரசு பிரபாகரன், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற வழக்குத் தாக்கல் எச்சரிக்கை!
இதன்போது, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காணிகளைத் தூய்மைப்படுத்தாமல் கைவிட்டு வெளியூர்களில் வசித்து வரும் காணி உரிமையாளர்களை இனங்காணும் பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், "ஒரு வார காலத்திற்குள் பாழடைந்த காணிகளைத் துப்பரவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்" என எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் விநியோகிக்கப்பட்டு, தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் காணிகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துள்ள இந்த உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


















