மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் எழுத்து மூலமான ஆதாரம் இல்லையென விவசாய மற்றும் காணி அமைச்சர் குறிப்பிடுகிறார். பல வருடங்களாக பல வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு எமது மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்க முடியாத சூழ்நிலைகள் இருக்கின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதனை மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் மயிலத்தமடு மேய்ச்சல் தரை என்பதொன்று இல்லை அமைச்சர் குறிப்பிடுவது ஏமாற்றமளித்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் சபையில் அதிருப்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
செம்மணி புதைகுழியில் இருந்து 480 இற்கும் அதிகமான மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீண்டும் ஆகஸ்ட் 4 முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் மனித எச்சங்கள் அதிகரிக்கின்ற போது அவற்றை பாதுகாக்கும் நடைமுறைகள், டி.என்.எ பரிசோதனைகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு இது தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்படாமல் இருப்பதற்கும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மறைக்கப்படமால் இருப்பதற்காக இந்த அரசாங்கம் முன்கொண்டு செய்ய வேண்டிய பாரிய பொறுப்புகள் உள்ளன.
டி.என்.எ பரிசோதனை மாதிரிகள் சர்வதேச தரத்தில் பாதுகாக்க வேண்டும். இதனை சாதாரண மனித எச்சங்கள் அகழப்படும் பொறிமுறைகளாக கருதாமல் ஒரு இனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவலமாகவும் இனப்படுகொலையாகவும் அடையாளப்படுத்தி எதிர்க்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிப்பதற்கும், சர்வதேச கட்டுப்பாட்டு முறையில் சர்வதேச பங்குபற்றுதலுடன் இதனை செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன்.
எமது இனத்திற்கு ஏற்பட்ட பல அழிவுகளில் இன்று அடையாளப்படுத்தும் சாட்சியின் ஆதாரமாக இருக்கும் செம்மணி படுகொலையின் ஆதராரங்களை மிக சிரத்தையுடன் மனித நேயத்துடன் நீதிக்கான பொறிமுறைகளை சர்வதேச பாதுகாப்பு மற்றும் சர்வதேச கட்டுப்பாடுகளின் கீழ் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை மயிலத்தமடு மாதவனை சம்பந்தமான உறுதியான எழுத்து மூல ஆதாரம் இல்லையென விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் கூறியுள்ளார். பல வருடங்களாக பல வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு எமது மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்க முடியாத சூழ்நிலைகள் இருக்கின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அது மேய்ச்சல் தரையென அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அமைச்சரின் இந்த கருத்து ஏமாற்றத்தை தருகின்றது என்றார்.
