உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க சதித்திட்டம் - ஹிஸ்புல்லா எம்.பி காட்டம்


2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட போது தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தகுதி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த பயங்கரவாத தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர், தாக்குதல்களுக்குப் பிறகு, குறிப்பாக காத்தான்குடியில் முஸ்லிம் சமூகமும் கடுமையான விளைவுகளைச் சந்தித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சில தனிநபர்கள் தடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே தாக்குதல்களுக்குப் பொறுப்பான அனைவரையும், அவர்களின் தரம், பதவி அல்லது பொருளாதார செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.