இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று (04.07.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை: "சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, எம்மை ஏமாற்றும் உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம்... சர்வதேச விசாரணையை கோருகின்றோம்..." என முதன்மைப் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன், இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
"போர் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனது?", மற்றும் இராணுவத்தை நம்பி சரணடைந்த பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட பதாகைகளை உறவினர்கள் கண்ணீருடன் ஏந்தியிருந்தனர்.
அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், தங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு தங்களுக்கு தகுந்த நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
உள்ளக நீதிப்பொறிமுறைக்கு எதிர்ப்பு: சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தின் போது, காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச விசாரனை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,
எங்களுக்கான ஒரு உண்மையை கண்டறிதல் அல்லது குற்றவாளிகளை கண்டுபிடிப்பது எந்த ஒரு விஷயத்திலும் இந்த ஒவ்வொரு சிங்கள அரசுகளாலயும் எந்த ஒரு எங்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கவில்லை.
12 ஆணைக்குழுக்களை நியமிச்சிருக்காங்க இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக. இந்த 12 ஆணைக்குழுக்கள்ள நாங்க முறைப்பாடுகளை கொடுத்திருக்கிறோம். எங்கட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறோம், ஆனால் இதுவரைக்கும் இந்த அரசாங்கத்தாலயோ சரி, இதுக்கு முதல் வந்த அரசாங்கங்களாலயோ சரி, எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் உலகப் பொறிமுறைகள் ஊடாக எந்த ஒரு தீர்வு மட்டாத பட்சத்துல, 2017ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாகத்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றதுல நாங்க உறுதியாக நிற்கிறோம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக.
இன்றைக்கு காணாமல்ஆக்கப்பட்டோர் அலுவலக என்ற ஒரு பொய்யான ஒரு அலுவலகத்தை, ஒரு பிரயோஜனம் இல்லாத ஒரு அலுவலகத்தை சர்வதேசத்தில உள்ளவங்களும் அத அங்கீகரிச்சு இன்றைக்கு இலங்கையில வடக்கு, கிழக்குல நடந்த காணாமல் போனொருக்கான அலுவலகம் ஒன்றை இங்க திறந்து வச்சிருக்காங்க. நாங்க கேட்கிறது காணாமல் போனொருக்கான அலுவலகத்தை அல்ல, அதினூடாக எங்களுக்கு நீதி கிடைக்காது. நாங்க கேட்டுக்கொண்டிருக்கிறது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு அலுவலகத்தை. அந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் இங்க இலங்கையிலயோ சரி சர்வதேசத்திலயோ சரி இதுவரைக்கும் கொண்டுவரப்படல.
இப்ப என்ன என்று சொன்னால், 6ஆம் தேதி, 7ஆம் தேதியோ மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனொருக்கான அலுவலகம் மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்துறாங்க. அதுல நீதி அமைச்சர் சொல்லியிருக்கிறார் என்னவென்று சொன்னால், தங்களுக்கு மரண சான்றிதழ்களைக் கொடுத்து, அவர்களுக்கான இழப்பீடுகளைக் கொடுத்து, இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர்றதுக்கு கொண்டு வர்றதாக சொல்லியிருக்கிறார். ஆனால், எங்கட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தான் நாங்க கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மரண சான்றிதழ் அந்த தாய்மார் எடுத்தாலும் சரி, நஷ்ட ஈடுகளை இவங்க கொடுத்தாலும் சரி, தங்களட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல வேணும். ஒவ்வொரு அரசாங்கமும் சிங்கள ஆதிக்கம் கொண்ட அரசாங்கத்தால, அரச படையினர்களால கைகள்ல கொடுத்து அந்த உறவுகள், இந்த பிள்ளைகள், சிறுவர்கள் வெள்ள வேன்ல கடத்திட்டுப் போன எங்கட உறவுகள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றத உண்மையைச் சொல்லணும். சாட்சியங்களாக நாங்க இருந்தும், இதுவரைக்கும் எங்கட சாட்சியங்களை 12 ஆணைக்குழுக்கள்ல பதிவு செய்திருக்கிறாங்களே தவிர, அது ஒரு தரவுக்காக மாத்திரம் தான் எடுக்குறாங்க. அந்த தரவுகளை எடுத்துக்கொண்டு அவங்க எங்களுக்கான நீதியை தராம மறுத்துக் கொண்டிருக்காங்க.
மற்றது சர்வதேச சில அமைப்புகள் இத கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன்னா, இந்த இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கிற நிதிகள், அந்த ஃபண்டுகளை வச்சுக்கொண்டு எங்கட தாய்மார ஒரு உளாற்றுப்படுத்தல் என்ற ஒரு பேர்ல, மரங்களை நடுறாங்க, மற்றது சித்திரங்களை வரையுறாங்க. நான் கேட்கிறேன், ஒரு சித்திரத்தை வரைஞ்சா என்ட கணவர் இல்லாத வலியை அதால மறந்து கொள்ள இயலுமா, ஒரு சித்திரத்தை வரைஞ்சா? சரி, ஒரு மரத்தைக் கொண்டு நாங்க நாட்டுறோம், என்னவென்று கேட்டால் மன ஆற்றல் என்று சொல்றாங்க. அந்த மரம் செத்துப் போனா எங்கட இருக்கிற வலியை விட இன்னும் ரெட்டிப்பு மடங்காக மாறுமா மாறாதா இந்த வலி?
இந்த வேதனைகளை ஏன் இந்த காசு கொடுக்கிற நிதி நிறுவனங்கள், எங்களுடைய உண்மையை கண்டறிவதற்காக, எங்கட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற ஒரு விஷயத்தை கண்டறியுறதுக்காக அந்த பணத்தை செலவிட்டா என்ன? நாங்க இன்றைக்கு தண்ணிக்கும் வழி இல்லாமல் தான் இந்த தாய்மார் வந்து தங்களட பிள்ளைகளை கேட்டுக்கொண்டு நிக்கிறோம் இன்றைக்கு நாங்க. அவங்களுக்கு என்ன நடந்தது என்றத நாங்க அறியோணும். அடுத்த கட்டத்துக்கு நாங்க போறதுக்கு எங்கட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரியோணும். குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தோணும். அவர்களுக்கான தண்டனைகள் கொடுக்கோணும், அப்படி கொடுத்தால் தான் எங்கட மனம் மாறும். அதை விட்டுட்டு, காசுகளை கொடுத்துட்டு மறப்போம் மன்னிப்போம் என்று போறதுக்கு நாங்க தொலைச்சது ஆடு மாடு அல்ல, பொருள் நகையல்ல, பொருள்கள நகைகள பொருளையா? இல்லையே, நாங்க எங்கட பெறுமதியான உயிர்களைத் தொலைச்சிருக்கோம். இந்த 17 வருஷத்துக்கும் இந்த பிள்ளைகளை வளர்க்குறதுக்கு நாங்க பட்ட அவமானங்கள், நாங்க பட்ட கஷ்டங்கள், நாங்க பட்ட வேதனைகள், நாங்க எவ்வளவு பிரச்சனைகளுக்கு நாங்க முகம் கொடுத்து இன்றைக்கு சர்வதேச நாட்டுகிட்ட நாங்க போய் நிக்கிறோம். ஏனென்றால், இங்க இலங்கை அரசாங்கம் எந்த உதவியும், எந்த ஒரு நீதி பொறிமுறையும் எங்களுக்காக இல்லை, காணாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கானது இல்லை.



.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
