"முடி சூடா மன்னன்", "சொல்லின் செல்வன்" மறைந்த செல்லையா இராஜதுரை அவர்களின் பிறந்த நாள் நிகழ்வும், அஞ்சலி நிகழ்வும்


மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வரும், முன்னாள் இந்து கலாச்சார மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சரும், "முடி சூடா மன்னன்", "சொல்லின் செல்வன்" எனப் போற்றப்பட்டவருமான மறைந்த செல்லையா இராஜதுரை அவர்களின் பிறந்த நாள் நிகழ்வும் அவரின் அஸ்திவைக்கப்பட்டு இரங்கல் அஞ்சலி நிகழ்வும் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னாள் பிரதி முதல்வர் .சத்தியசீலனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கிநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அவரது அஸ்தி மற்றும் உருவப்படத்திற்கு மாநகர முதல்வரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் விசேடமாக முன்னாள் அமைச்சர் இராசதுரை அவர்களின் மகள் டாக்டர் பூங்கோதை மற்றும் மகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மறைந்த தலைவருக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

1927ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி பிறந்த செல்லையா இராஜதுரை அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி இயற்கை எய்தினார்.அவரது அஸ்தி இன்றைய தினம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு வாவியில் கரைக்கப்பட்டது.

அவரது சமூக மற்றும் அரசியல் சேவைகளை நினைவுகூர்ந்து இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அவருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துடன் இராஜதுரை அவர்கள் ஆற்றிய பணிகளும் இங்கு நினைவுகூரப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான செல்லையா இராசதுரை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அமைச்சராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.