இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலிகளின் சிறுநீர் மூலம் பரவும் 'லெப்டோஸ்பைரா' பக்டீரியாவினால் ஏற்படும் இந்த நோய், நாட்டில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தொற்றுநோய்களில் ஒன்றாக காணப்படுகிறது.
விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள், வடிகால் சுத்தம் செய்பவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட நெல்வயல்கள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோய்த் தாக்கத்துக்கு அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளவர்களாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தேங்கிய நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
சேறு நிறைந்த இடங்களில் பணியாற்றுவோர், வைத்திய ஆலோசனையில் தடுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தான டொக்ஸிசைக்ளின் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். இம்மருந்து பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், எலிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி ஆகியவை டெங்கு நோயின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதாகவே அமையும்.
எனவே, இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், சுய வைத்தியங்களை தவிர்த்து, உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடவேண்டும் எனவும், சிகிச்சையைத் தாமதப்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
