போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுதானிய அறுவடை விழா


போரதீவுப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுதானியப் பயிர்களின் அறுவடை விழா போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதோடு, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள் குறித்து எதிர்கால சந்ததியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் செயலக வளாகத்தில் கம்பு, குரக்கன், திணை, சாமை உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானியப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.

அவற்றின் அறுவடையையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் சிறுதானியங்களின் முக்கியத்துவம், அவற்றின் ஊட்டச்சத்து பெறுமதி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அவை வகிக்கும் பங்கு மற்றும் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

மேலும், உள்ளூர் விவசாய உற்பத்தியை ஊக்குவித்தல், சிறந்த உணவுப் பழக்கங்களை வளர்த்தல் மற்றும் சிறுதானியப் பயிர்ச்செய்கையை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துதல் போன்ற விடயங்களும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறுதானிய அறுவடையில் பங்கேற்றனர்.

சிறுதானியப் பயிர்ச்செய்கை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.