மட்டக்களப்பு மாவட்டத்திலும் டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மீனவ பயனாளிகளுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வும் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையான கூட்டமும் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வாய்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜீ.ஜீ.குணசேன,
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அதிகார சபை மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) எந்திரி என்.சிவலி ங்கம், கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வாய்ப்பு அபிவிருத்தி கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட 35 பயனாளிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான நஷ்ட ஈடு தொகையினை வழங்கி வைத்தார் இதில் நான்கு பயனாளிகளுக்கு 4.5 லட்ச ரூபாய் வீதமும் 31 பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீதமும் நஷ்ட ஈடு தொகை இங்கு வழங்கி வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்போர்,நன்னீர் வளர்ப்பு மீன்பிடியில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
நாங்கள் முன்னர் போன்றல்ல, முன்னர் நீங்கள் வருகின்ற பொழுது உங்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தார்கள். அரசியல்வாதிகளுடைய அராஜகம் இருந்தது. அந்த அராஜகம் அனைத்திற்கும் இன்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இன்றைக்கு நீங்கள் வந்து சுதந்திரமாக உங்களுடைய செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழல் நாட்டில் உருவாகியிருக்கின்றது.
அதேபோன்று இன்றைக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக நாட்டில் யார் தவறு செய்தாலும், யார் குற்றம் இழைத்தாலும், அந்த குற்றவாளிகளை இனம் கண்டுகொண்டு, அந்த குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் இன்றைக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணை;, இந்த நாட்டில் லஞ்ச, ஊழல், மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக, இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக, தங்களுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அதைத் துஷ்பிரயோகம் செய்த நபர்களுக்கு எதிராக, அதன் மூலமாகத் தனிப்பட்ட அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடப்பட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்போம் என்று நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம்.அந்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப, இதுநாள் வரைக்கும் யாருமே எதிர்பார்க்காத பெரிய புள்ளிகளும் கூட, இந்த நாட்டில் அரசியல்... அரசியலில் ராஜாங்கத்தைக் கொடிகட்டிப் பறந்தவர்களும் கூட ரணில் விக்ரமசிங்க, அதேபோன்று கொள்ளைக்காரனான ராஜபக்சாக்கள், அதேபோன்று நாட்டில் இருந்த ஏனைய மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கின்ற மக்களுடைய பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் அனைவரும் இன்றைக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
அது மாத்திரமல்ல, இன்றைக்கு சுரேஷ் சலே போன்ற புலனாய்வுப் பிரிவினுடைய பிரதான, பிரதம அதிகாரியும் கூட இன்றைக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றார். அந்த வகையில் நாங்கள் அளித்த வாக்குறுதியில், இந்த நாட்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக, இந்த நாட்டில் மக்களுடைய உயிர்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும், இன்றைக்கு ஊனமுற்று இருக்கிறவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதற்குப் பின்னால் நாங்கள் தேடிப் பார்க்கின்ற பொழுது அரசியல் மறைந்திருக்கின்றது. அப்போ அந்த அரசியல் ஊடாக இன்றைக்குப் பல்வேறு உண்மைகள் வெளிவந்த வண்ணம் இருக்கு.
அதேபோன்று நாங்கள் கடந்த காலங்களிலே போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம். அது மாத்திரமல்ல, அந்த போதைப்பொருள் வியாபாரிகள், அவர்களுடைய ராஜாங்கம் இன்றைக்கு முடக்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறு முடக்கப்பட்டு இருக்கின்ற நடவடிக்கை தொடர்ந்து விசாரிக்கப்படுகின்ற பொழுது, இன்றைக்குத் தெரியவந்திருக்கின்றது முன்னாள் நீதி அமைச்சரும், அவருடைய மகனும் கூட் இதில் தொடர்;புகொண்டிருக்கின்றார். கோடிக்கணக்கான நிதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த பரிமாறிக் கொள்ளப்பட்ட நிதிகள் என்பது வேறு யாரும் அல்ல, பாதாள உலகக் கும்பல்களை, பாதாள உலகத் தலைவர்களைச் சட்டத்திலிருந்து பாதுகாக்கின்றோம் என்ற வாக்குறுதியின் கீழ், கோடிக்கணக்கான ரூபாய்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக இன்றைக்கு அவர்களுடைய விசாரணைகள் ஊடாக இன்றைக்குத் தெரியவருகின்றது.
அவ்வாறு தெரியவருகின்ற பொழுது இன்றைக்குத் தெரிகின்றது வேறொன்றுமல்ல, இன்றைக்கு அவருடைய மகன் மாத்திரமல்ல, அதற்குப் பின்னால் அப்பனும் இதில் கலந்துகொண்டிருக்கின்றாரா என்ற கேள்வியும் கூட எழுகின்றது. அவர் மாத்திரமல்ல, முன்னாள் ரணில் விக்ரமசிங்கவோடு இருந்த முக்கியமான புள்ளிகளும் கூட இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள் என்று இன்றைக்கு விசாரணைகள் முடுக்கப்பட்டு வருகின்றது.
அதனால் இந்த முடக்கம் என்பது வேறொன்றுமல்ல, அதாவது கடந்த காலங்களிலே நீதியை நிலைநாட்டுகின்ற நபர், நாட்டில் ஜனநாயகத்தை நேசிக்கின்றவன் நான், நாட்டின் சட்டம் ஒழுங்கை நேசிக்கின்றவன் நான், நாட்டில் இந்த நாட்டில் லஞ்ச, ஊழல், மோசடிக்கு எதிராகப் பேசுகின்றவன், நாட்டில் போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுகின்றவன் என்று கூறிக்கொண்டிருந்த நீதி அமைச்சராக இருக்கின்ற... இன்றைக்கு அவருடைய மகன் இன்றைக்கு நாங்கள் தேடிப் பார்க்கின்ற பொழுது, இன்றைக்கு எங்களுக்குத் தெரியவருகின்றது வேறொன்றுமல்ல, அவரும் கூட இதில் உடந்தையாக இருக்கின்றாரா என்று.
விஜயதாச ராஜபக்ச அவர்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றாரா என்கின்ற விசாரணைகள் கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எது எவ்வாறான போதிலும் கூட விசாரணைகள் தொடர்கின்றது. இவ்வாறான கள்ளர்கள், திருடர்கள், மோசடிக்காரர்கள் படிப்படியாக ஒருவர் பின் ஒருவர் இன்றைக்கு அவர்கள் கம்பி எண்ணுவதற்காக வேண்டி, அவர்களுடைய உண்மையான விலாசமாக இருக்க வேண்டிய சிறைச்சாலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
செம்மணிபகுதியில் முன்னெடுக்கப்படும்போராட்டம் தேவையில்லாத போராட்டம். ஏனென்றால் நீங்கள் போராட வேண்டியதில்லை, நீங்கள் போராடுகின்றது எதற்காக என்றால் வேறொன்றுமல்ல, 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட படுகொலை. அந்த படுகொலைகளைச் செய்த பாவிகள் இருக்கின்றார்கள் என்பது உண்மை.
ஆனால் அன்றைய காலகட்டங்களில் கொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களுடைய உடல் எச்சங்கள் இன்றைக்குத் தோண்டி எடுக்கப்படுவது உண்மை. ஆனால் அதுகள் தொடர்பாக அவைகளைத் அதை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தது வேறாருமல்ல, எங்களுடைய அரசாங்கமாகும். அதற்கும் போதுமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்தவர் வேறாருமல்ல, எங்களுடைய அரசாங்கமாகும். அதற்கான நீதிபதிகளை நியமித்தது யார் என்றால் வேறு யாருமல்ல, எங்களுடைய அரசாங்கமாகும். அதைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புப் பிரிவை பலப்படுத்தியது யார் என்றால் வேறு யாருமல்ல, எங்களுடைய அரசாங்கமாகும். இதற்கு முன்னர் இப்படி நடக்கவில்லை.
அதனால் நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றோம். இவ்வாறு மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்ற அனைத்தையும் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுகின்ற செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். அதனால் இதன் கீழ், இதன் கீழ் கடந்த காலத்தில் இந்த மக்களுடைய மனித எலும்புக்கூடுகளை வைத்து அரசியல் செய்த அரசியல்வாதிகள், காவாலித்தனமான பாவித்தனமான அரசியல்வாதிகள் மீண்டும் எமது நாட்டு மக்கள் மத்தியில், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் இனவெறியைத் தூண்டுகின்றனர். இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர். அதன் மூலமாக இந்த நாட்டில் ஒரு கிலேச தன்மையை ஏற்படுத்துகின்ற பாவித்தனமான செயல்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள் என்பதையும் கூட மக்கள் மறந்துவிடக் கூடாது.
எது எவ்வாறான போதிலும் கூட, நாங்கள் எங்களுடைய அரசாங்கம் என்பது இங்கு மாத்திரமல்ல, உங்களுக்குத் தெரியும் 1987ஆம் ஆண்டு, 89ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே 70,000க்கு அதிகமானவர்கள் எங்களுடைய சகாக்களும் கொல்லப்பட்டார்கள். எங்களுடைய ரோஹண விஜேவீர தோழர் உயிரோடு பொரளையில் கணத்தையில் இருக்கின்ற பர்னரில் போட்டு எரிக்கப்பட்டார். அவ்வாறு 70,000 பேர். நாங்கள் அதற்காக இன்றைக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கவில்லை. ஏனென்றால் எங்களுடைய எதிர்பார்ப்பு வேறொன்றுமல்ல, அவர்கள் கண்ட கனவொன்று இருக்கின்றது. அதான் இந்த நாட்டிலுள்ள மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு நாடு வேண்டும். இனியும் சுரண்டலற்ற ஒரு நாடு தேவை. இனியும் லஞ்ச ஊழல் இல்லாத நாடு தேவை. இனியும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நாடு தேவை. அதுதான் அவர்களுடைய கனவு. அந்தக் கனவை இன்றைக்கு நாங்கள் நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் இன்றைக்குச் செம்மணியில் புதைகுழியில் இறந்துபோன மக்கள், போராளிகளும் கூட அவ்வாறான கனவு கண்டிருப்பாராக இருந்தால், அவர்களுடைய கனவு இன்றைக்கு வடக்கில் வாழுகின்ற, கிழக்கில் வாழுகின்ற மக்களுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகள், அபிலாஷைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
அவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற பொழுது கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகளும், வடக்கில் இருக்கின்ற அந்த கொழும்பில் கோட்சூட் போடுகின்ற, அதேபோன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தவுடன் வேட்டிகட்டுகின்ற, சுத்துமாத்து வேலையில் மாத்திரம் ஈடுபடுகின்ற நபர்கள்.
அந்த சுத்துமாத்தினுடைய கைக் கூலியாக இருக்கின்ற கிழக்கில் இருக்கின்ற ஒரு எம்பியும் இருக்கின்றார்.எல்லாரும் சேர்ந்து மீண்டும் இந்த நாட்டில் ஒரு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற, மக்கள் மத்தியில் ஒரு கிலேச தன்மையாக ஏற்படுத்துகின்ற, மீண்டும் அவர்களுக்குக் கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் இந்த நாட்டை ஒப்படைப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள் என்பதை நாங்கள் கூறிக்கொண்டு, மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் அவைகளுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்கு, அதேபோல் செம்மணிக்கான நீதியையும் நாங்கள் வழங்குவோம் என்று கூறிக்கொண்டு முடிக்கின்றேன்,