போதைப்பொருள் எமக்கு வேண்டாம் - இளைஞர் யுவதிகள் விழிப்புணர்வு நடைபவனி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் முழு நாடும் ஒன்றாக தேசிய போதையொழிப்பு திட்டத்தினை முன்னிறுத்தி "இளைஞர் நடைபவனி - மட்டக்களப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், "போதைக்கு இல்லை சொல்லுங்கள்" என்ற முக்கிய கருப்பொருளை கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி அருள்மொழி நிசாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.ஹமீர்,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார உட்பட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள்,இளைஞர் சம்மேளன தலைவர் மற்றும் பிரதேச உறுப்பினர்கள்,இளைஞர்,யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மங்களராமய விகாரையில் இருந்து  காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம் எனும் கருப்பொருள் அடங்கிய பல்வேறு வகையான பதாகைகளை ஏந்தியிந்தனர்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினரும் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராகவும், குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் நாடக குழுவினரால் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் நடாத்தப்பட்டது.