மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்தர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த வீதியையும் முற்றாக உடைத்துச் சென்றுள்ளது.
வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும் நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
விவசாய நிலங்களுக்கான போக்குவரத்துப் பாதிப்பால் விவசாயிகளும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பாலப் பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் வலுவான தற்காலிக வீதியை அமைத்திருக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் திட்டமிடல் குறைபாடே இந்த அவல நிலைக்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது வெல்லாவெளி போக்குவரத்து பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் வீதியை மூடிப் பாய்வதால், ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்தினை அவர்கள் முற்றாகத் தடை செய்துள்ளனர்.







