தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகம் விதைக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில் உள்ளது. 50 நாட்கள் கடந்தும் சில கமலநல சேவைகள் நிலையத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் பசளை விநியோகம் நடைபெறாமல் உள்ளது மிக வருத்தத்தினைத் தருகின்றது.
வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு தனியார் கம்பெனி மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்து அவர்களுக்குரிய பணமும் கமலநல சேவைகள் நிலையத்தினால் கடந்த மாதம் (ஏப்ரல்) வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்று வரை ஒவ்வொரு நாளும் நாங்களும் கமலநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாளை வரும் நாளை வரும் என்று விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றார்கள். அதாவது அந்த நிறுவனம் வந்து எங்கள் அதிகாரிகளைக் கூட ஏமாற்றுகின்றது.
நேற்று தனியார் நிறுவனத்துக்கு மூன்று லாரிகள் அனுப்பப்பட்டது. மூன்று லாரிகளில் ஒரு லாரியில் உரம் ஏற்றப்பட்டும், பிற்பகல் அந்த லாரியைத் தடுத்து அந்த லாரியின் சாவியை அந்த உரக்கம்பெனி பறித்து உரம் வருவதனைத் தடை செய்துள்ளார்கள். அதன் பிற்பாடு எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய உர செயலகம், பிரதியாணையாளர் கமலநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பிற்பாடு ஒரு லாரி மாத்திரம் இரவு விடுவிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.
இருந்தும் வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு 327 மெட்ரிக் டன் தர வேண்டிய பசளையில் 40 மெட்ரிக் டன் மாத்திரமே தரப்பட்டுள்ளது. விதைத்து 50 நாட்கள் கடந்த நிலையில், பிறந்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தாய்ப்பால் மறுக்கப்பட்டது போல் அந்தப் பயிர்களுக்கான உரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது இவ்வாறான கம்பெனிகளை தயவு செய்து அரசாங்கம் இழுத்து மூட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கமலநல சேவைகள் நிலையத்துக்குள் குவிந்த வண்ணமாக இருக்கின்றார்கள்.
நாங்கள் நினைக்கின்றோம் இந்த உரக்கம்பனிகள் கமலநல சேவைகள் நிலையத்துக்கான உரங்களைத் தாமதப்படுத்துவதன் மூலம், வெளியில் அவர்களால் 25 கிலோ யூரியா என்று சொல்லப்படுகின்ற கலர் அடிக்கப்பட்ட யூரியாவினை விற்பனை செய்வதற்காக இவ்வாறான சூட்சுமங்களைக் கையாளுகின்றார்களோ என சந்தேகத்தை எழுப்புகின்றது. அரச கூட்டுத்தாபனம் 853 மெட்ரிக் தொன் மாவட்டத்துக்குத் தர வேண்டி இருந்தது, அதில் 697 மெட்ரிக் தொன்னைத் தந்திருக்கின்றார்கள், மீதமுள்ள 156 மெட்ரிக் தொன்; தற்போது கிடைக்க வேண்டியுள்ளது. தனியார் கம்பெனியில் 2977 மெட்ரிக் தொன் தர வேண்டி இருந்தது, 2047.5 மெட்ரிக் தொன் தற்போது மாவட்டத்துக்கு வந்துள்ளது, இன்னும் 929 மெட்ரிக் டன் தனியார் கம்பெனி மாவட்டத்துக்குத் தர வேண்டி இருக்கின்றது. அதிலும் தனியார் நிறுவனம் தான் ஆகக்கூடுதலாக 287 மெட்ரிக் டன் இன்னும் தர வேண்டியுள்ளது.
நாங்கள் ஓட வேண்டிய இடத்துக்கெல்லாம் ஓடிவிட்டோம், கதைக்க வேண்டியவர்களிடமெல்லாம் கதைத்துவிட்டோம், ஆனால் தீர்வு வராததால் ஜனாதிபதி 20-ஆம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக அறிகின்றோம், அவருக்கு இந்தச் செய்தி போக வேண்டும். அவர் விரைவாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, வாழைச்சேனை கமலநல சேவைகள் நிலையத்துக்கு இன்னும் இன்னுமொரு நிறுவனத்தால் 4200 பேக் யூரியா தர வேண்டி இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாய திணைக்களத்தின் சிபாரிசாக ஏக்கர் ஒன்றுக்கு யூரியா 125 கிலோவும், ரிஎஸ்பி 45 கிலோவும், எம்ஓபி 45 கிலோவுமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது முதலாம் கட்டமாகக் கமலநல சேவைகள் நிலையத்தின் ஊடாக ஏக்கர் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40-45 கிலோ வரையான யூரியா வழங்கப்படுகின்றது. அது உண்மையில் எமது மாவட்டத்தின் மணல் வளத்தைப் பொறுத்தவரையில் பசளை குறைந்த மண்ணாகக் காணப்படுவதால் அவர்கள் தரும் பசளை போதாமல் உள்ளது. அதனை ஆகக் குறைந்தது ஏக்கர் ஒன்றுக்கு 100 கிலோவாவது தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தற்போது விவசாயிகளிடம் இருந்த நெல்லை வந்து தனியார் வியாபாரிகள் 6000 ரூபாய் தொடக்கம் 7000 ரூபாய் வரையான விலையிலேயே கொள்வனவு செய்கின்றார்கள். எங்களது உற்பத்திச் செலவு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுபோக அறுவடையைப் பொறுத்தவரையில் எங்களது உரத்துக்கான விலை, டீசல் மற்றும் விதைநெல், கலைநாசினி, கிருமிநாசினி என்பன மிக அதிகமான விலையேற்றம் பெற்று காணப்படுகின்றது. அறுவடை செய்தவுடன் ஆகக் குறைந்தது நாட்டு நெல்லுக்கான விலை 150 ரூபாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எதிர்காலத்தில் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த சிறுபோகத்தைப் பார்த்துதான் நாங்கள் எதிர்வரும் போகம் இந்த விவசாயத்தைச் செய்வதா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஜனாதிபதி அவர்களிடம் நேரடியாக நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம், மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் தயவாகக் கூறுகின்றோம்.

.jpeg)
