பலத்த மழை குறித்த எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5 மில்லிமீற்றரும், வத்துபிடிவலவில் 105.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கிலிமலே பகுதியில் 121 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவில் 102.5 மில்லிமீற்றரும், ஹொரணையில் 101.5 மில்லிமீற்றரும் மழை பதிவாகியுள்ளது.


மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.