வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்? RDD பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஏறாவூர் பற்று தவிசாளர் ஊடாக வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி கடிதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளை தடுக்கும் வகையில் செங்கலடி தபால் கந்தோர் வீதி ஊடான சந்தை வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
செங்கலடி சந்தைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் காரணமாக தொடர்சியாக வாகன விபத்துக்கள் ஏற்படுவதோடு, பிரதான வீதியின் ஊடாக, சந்தை வீதியால் பயணிக்கும் கனரக வாகனங்களினால் வாகன நெரிசல்கள் ஏற்படுகிறது.
இவ் வீதியால் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அத்தோடு வாகனங்கள் வீதி சமிக்ஞைகளை மீறி செயற்பட நிர்ப்பந்திக்கப்படுவதால் வீதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
எனவே மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு செங்கலடி சந்தைக்கான வாகன போக்குவரத்து பாதையாக செங்கலடி தபால் கந்தோர் வீதி ஊடான பாதையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தபால் கந்தோர் வீதி ஊடாக செல்லும் முருகன் கோயில் சந்தை வீதிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம்(RDD) ஊடாக கனரக வாகனங்கள் செல்லக் கூடிய வகையில் உடனடியாக அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். எனவும் இதன் ஊடாக செங்கலடி பிரதான வீதி ஊடாக சந்தைக்கு செல்லும் வாகனங்கள் தடுக்கப்படுவதோடு பிரதான வீதிச் சமிக்ஞை பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலையும், விபத்துக்களையும் குறைக்க முடியும். என தெரிவித்துள்ளார்.
புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் விபரம்
தபால் கந்தோர் வீதி - 300M ,முருகன் கோயில் சந்தை வீதி - 350M ,செங்கலடி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் சந்தை வீதி - 200M ஆகிய வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு செங்கலடி சந்தைக்கான போக்குவரத்து பாதை மாற்றப்பட்டால் மாத்திரமே செங்கலடி பிடித்தமான வீதியில் அமைந்துள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. பிரபு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,
வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
