தினமும் பல்வேறு சவால்களுடன் கண்பார்வைகள் அற்றவர்கள் வெள்ளைப்பிரம்புடன் பயணிப்பதாக விழிப்புலனற்றவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்றாகும். “விழிக்குறைக்கு வழித்துணையாம் எம் வெண் பிரம்பு” என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு தரினம் விழிப்புலனற்றோர் பாடசாலையும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையும் இணைந்து ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையிலிருந்து கொக்கட்டிச்சோலை சந்தி வரையில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் தரினம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொது மக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வெள்ளைப்பிரம்புகளை ஏந்தியவாறு பெருமளவான விழிப்புலனற்றவர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு தரினம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவர் நா.இதயராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசசபை தவிசாளர் இ.கிரேஸ்குமார்,பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.ரமேஸ்,மண்முனை தென் மேற்கு பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி மூ.உதயகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தினை தொடர்ந்து மகிழடித்தீவில் உள்ள கலாசார மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வின்போது விழிப்புணர்வற்றோரின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
அத்துடன் வெள்ளைப்பிரம்பின் முக்கியத்துவம் தொடர்பிலான பல்வேறு உரைகளும் நடைபெற்றதுடன் இதன்போது பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
விழிப்புலனற்றவர்கள் வீதிகளில் பயணிக்கும்போது தினமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக இங்கு கருத்து தெரிவித்த விழிப்புலனற்றவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்துச்செய்வதற்கான வீதிகளின் ஓரங்களில் வந்துநின்றால் எந்த போக்குவரத்து பஸ்களும் தங்களை கண்டுகொள்வதில்லையெனவும் வெள்ளைப்பிரம்புடன் நிற்பதைக்கண்டாலே ஏற்றாமல் செல்லும் நிலையே இன்றும் காணப்படுவதாகவும் அவ்வாறு ஏற்றிச்சென்றாலும் தங்களுக்கு முறையான மரியாதைகள் கிடைப்பதில்லையெனவும் கவலை தெரிவித்தனர்.
வீதிகளில்வெள்ளைப்பிரம்புடன் செல்பவர்களுக்கு அருகில் சென்று வாகனங்கள் அதிக ஒலியெழுப்பும் நிலைமைகள் காணப்படுகின்றன.இதனால் பெருமளவில் மனரீதியாக விழிப்புலனற்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.வீதிகளில் செல்லும்போது அருகில்வந்து ஒலியெழுப்புவதனால் சிலவேளைகளில் விழும் நிலைமையும் காணப்படுகின்றது.இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும்.
அக்கரைப்பற்று வங்கியொன்றில் வங்கிக்கணக்கொன்றை வைத்திருப்பவர் மட்டக்களப்பில் உள்ள வங்கியில் அந்த கணக்கிலிருந்து பணம் பெறமுடியாத நிலையிருப்பதாகவும் ஏனையவர்கள் அதனைப்பெறும்போது தாங்கள் மட்டும் புறக்கணிக்கப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கண்பார்வையற்றவர்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் ஒவ்வொரு விடயங்களையும் ஊடகங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச்செல்லவேண்டும்.எங்களது விடயங்களை ஊடகங்கள் கண்டுகொள்வது குறைவானதாகவேயிருக்கின்றது.விழிப்புலனற்றவர்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு கொண்டுசெல்லும் பணிகளை ஊடகங்கள் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை இதன்போது முன்வைத்தனர்.