அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
கடந்த 22,23,24 மற்றும் 25ம் திகதிகளில் மாத்தறை விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் டேக்வாண்டே (TAEKWONDO) போட்டியில் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்யாலயா மாணவர்கள் விளையாடி வெற்றியீட்டி ஒரு வெள்ளி பதக்கத்தினையும், ஒரு வெண்கல பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.
பெண்களுக்கான 49-53 கிலோ பிரிவில் போட்டியில் விஸ்ணு மகா வித்தியாலய மாணவி சர்மிளா பங்குபற்றி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டதுடன் ஆண்களுக்கான 54-58 கிலோ பிரிவில் போட்டியில் டிலக்சன் என்பவர் பங்குபற்றி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கல பதக்கத்தினை சுவிகரித்துக் கொண்டனர்.
இவர்களை கௌரவிக்கும் முகமாக இன்றைய தினம் பாடசாலையின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அவர்கள் ஊர்வலமாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு மாணவர்களுடன் இணைத்து அவர்களின் பெற்றோர்களையும் கௌரவிக்கும் முகமாக வெற்றியீட்டிய மாணவர்களின் பெற்றோர்களின் கரங்களினால் அவர்களுக்கான சான்றுதல்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய இந்நிகழ்வின் போது கடந்த வருடம் இதே போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொண்ட மாணவி டிஸ்கா அவர்களும் கௌரவிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் தர்மரெட்ணம் கிருஷ்ணகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.