செம்மணி மனித புதைகுழி தளத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள இடத்தில், நான்கு மாதங்களாக அகழ்வாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமது அனுமதியின்றி எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (ஜனவரி 19) யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது, தாம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ரணிதா ஞானராஜா கூறுகிறார்.

"புதைகுழி அமைந்துள்ள வளாகத்தில் நிலத்தில் எந்தவிதமான அபிவிருத்திகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம், எதிர்வரும் காலத்தில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள முடியாது என உத்தரவிட்டுள்ளது."

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு மாத அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாயை நீதி அமைச்சு வழங்கியிருந்தாலும், கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை.

நேற்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய  அதிகாரி மற்றும் அகழ்வாய்பு நிபுணர்களுடன் மனித புதைகுழியைப் பார்வையிட்டனர்.

அகழ்வாய்வுத் தளத்தின் சில பகுதிகளில் மழைநீர் ஏற்கனவே தேங்கி நிற்பதைக் காட்டும் காணொளிகளை உள்ளூர் ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

பெப்ரவரி 9, 2026 அன்று சட்ட வைத்திய  அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வு இடத்தில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"தேங்கியுள்ள வெள்ளநீர் வற்றும் வரை காத்திருந்து அகழ்வு பணிகளை தொடங்க வேண்டும் அல்லது தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், தேங்கியுள்ள வெள்ளநீரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில், நல்லூர் பிரதேச சபையின் மூலம் வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண  சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியின் அகழ்வாய்வு முதன்முறையாக மே 15, 2025 அன்று ஆரம்பமானது.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு  செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 240 மனித எலும்புகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புகளுடன், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும்  பாடசாலை பை உள்ளிட்ட பிறபொருட்களும் அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.