30வது வருடத்தில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா -முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடமாக சிறுவர் மற்றும் வளர்ந்தவர்களின் உளமேம்பாடு மற்றும் இனநல்லுறவு,சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் அதற்கு பின்னரான காலம் என தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தினை தலைமையகமாக கொண்டு வடகிழக்கு உட்பட முழு நாட்டிற்குமான சேவையாக இதனை முன்னெடுத்துவருகின்றது.

இதன் 30வது ஆண்டினை நிறைவுசெய்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் 30வது ஆண்டினை குறிக்கும் வகையிலான நினைவுப்பலகை திரைநீக்க நிகழ்வும் நடைபெற்றது.

வண்ணத்துப்பூச்சின் சமாதான பூங்காவின் ஸ்தாபகரும் அதன் இயக்குனருமான அருட்தந்தை போல்சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்கனர்சபை உறுப்பினர்கள், வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யுத்த காலத்தில் யுத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உளவியல் ரீதியான தேவைகளை கருத்தில்கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பின்னர் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வளர்ந்தவர்கள் என அனைவருக்குமான உளவியல்மேம்பாடுகளை வழங்கிவருகின்றது.

அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சுனாமி மற்றும் இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய காரணிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரின் உளவில் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவினைஏ ற்படுத்தும் செயற்பாடுகளிலும் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்கா கடந்தகாலத்தில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவந்திருக்கின்றது.

இந்த நிகழ்வில் 30வருட நிறைவினைக்குறிக்கும் நினைவுப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்குனர்சபை மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

1996ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மன இறுக்கத்தினை போக்குவதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் வளர்ந்தவர்களின் மனக்காயங்களை தீர்ப்பதற்குமான இடத்தினை அமைக்கவேண்டும் என்ற இயேசுசபை துறவி அருட்தந்தை போல் சற்குநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு கனடாவினை சேர்ந்த உளவியலாளர் போல் ஹோகன் அனுசரணை மற்றும் ஆலோசனையின் கீழ் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவரும் இணைந்து அனைத்து சமூதாயமாக ஒத்துழைப்பு வழங்கி வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினை முன்கொண்டுசெல்லவேண்டும் என அதன் ஸ்தாபகர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் தெரிவித்தார்.