அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம்


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.வடக்கில் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் கிழக்கில் அம்பாறையில் நேற்று 27ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி செல்வராணி தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையிலான மட்டக்களப்பு மாவட் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களும் கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிளையின் தலைவர் சட்டத்தரணி நிதான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவளித்துவருகின்றனர்.