கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியா சங்கம் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.
இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமானது (TAEU) பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரட்ண அவர்களின் முறையற்ற செயற்பாடுகளைக் கண்டித்து அடையாளப் பணிப் புறக்கணிப்பினை 29-09-2025 அன்று தொடக்கம் முன்னெடுத்துவருகின்றது.
குறிப்பாக பட்டமேற்கற்கைகள் பீடத்தின் முதலாவது பீடாதிபதியினை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இல்லை எனக் காண்பித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நீக்கியது. ஆயினும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மற்றுமொரு பீடாதிபதியும் அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இல்லாமலிருந்தும் தொடர்ந்தும் பதவியில் செயற்பட அனுமதி வழங்கியிருந்தனர். மேலும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் மீண்டும் பட்டமேற்கற்கைகள் பீட பீடாதிபதிக்கான பணியிடம் 20-06-2025 முதல் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இன்னமும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அப்பீடாதிபதி நியமனத்தை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்கின்றது.
இதன்காரணமாக பின்வரும் அசௌகரியங்களை பல்கலைக்கழகம் எதிர் நோக்குகின்றது.
1. பட்டமேற் கற்கைகள் பீடம் பீடாதிபதி இல்லாமல் இயங்குகின்றது.
2. இந்த வெற்றிடம் கல்வி மற்றும் நிருவாக விடயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. பட்டமேற்கற்கைள் மாணவர்களது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
4. கடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பட்டமேற் கற்கைகள் பீடத்தின் சபை கூடமுடியாமல் உள்ளது. இது பல கல்வி சார் முடிவுகளை எடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
5. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பட்டமேற் கற்கைகள் பீடத்திலிருந்து பட்டங்களைப் பெறுவோரது பெயரினை உத்தியோக பூர்வமாக முன்வைப்பதற்குரிய பீடாதிபதி இன்மையால் சங்கடங்கள் ஏற்படும் சாத்தியமுள்ளது.
இவை மாத்திரமன்றி பல முறையற்ற செயற்பாடுகளை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னரும் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
1. கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் தெரிவினை சட்ட ரீதியற்ற முறையில் செல்லுபடியற்றதாக்கி மீண்டும் அத்தெரிவினை செய்ய வைத்தது. இரண்டாவது தெரிவு நடைபெறுவதற்கு முன்னர் பட்டமேற்கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி நீக்கப்பட்டமையும், கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன விகிதாசாரம் பேணப்படாமல் பெரும்பான்மையினத்தவரை அதிகளவில் பேரவை உறுப்பினர்களாக்கியதும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதற்குரிய எதிர்ப்புகள் ஆசிரியர் சங்கத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்திலும் தெரிவிக்கபட்டிருந்தும். அது பற்றி கவனத்தில் கொள்ளவில்லை.
2. உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ பல்கலைக் கழகமொன்றால் வழங்கப்படாத, போலிப் பேராசிரியர் பட்டத்தினைக் கொண்ட ஒருவரினை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கண்ணியமான பேரவைக்கு உறுப்பினராக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்திருக்கிறது. பேராசிரியர் பட்டத்தினை யார் பயன்படுத்தலாம் என்னும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே தமது சுற்றறிக்கையினையும் மீறி போலிப்பேராசிரியருக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இது பற்றி எமது ஆசிரியர் சங்கம் கடிதம் மூலம் அறிவித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்படி முறையற்ற செயற்பாடுகளைக் கண்டிக்கும் அதேவேளை பின்வருவனற்றையும் கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.
1. ஊடனடியாக பட்டமேற்கற்கைகள் பீடத்திற்கான பீடாதிபதி நியமிக்கப்படவேண்டும் அல்லது மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
2. நியமனங்களை மேற்கொள்வதும் நீக்குவதுமான முடிவுகளில் அனைத்துப் பீடங்களையும் சமமாக நடாத்துதல் வேண்டும்.
3. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவானது வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுதல் வேண்டும்.
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேற்படி விடயங்களுக்கான சாதகமான தீர்வினை எதிர்பார்க்கின்றது. சாதகமான தீர்வு கிடைக்காதவிடத்து தொடர்ச்சியானதும் கடுமையானதுமான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
செ.சாந்தரூபன்
செயலாளர்
கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்