வடகிழக்கிலே அதிகூடிய அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி -இதுவே தமிழரசுக்கட்சியின் கோரிக்கை என்கின்றார் சுமந்திரன்

ஒரு முழுமையான அரசியல் தீர்வு தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக உருவாக வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு வடகிழக்கிலே அதிகூடிய அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். உடனடியாக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை காலந்தாழ்த்தாது நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று காலை முதல் மாலை வரையில் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பகுதியில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இரா.சாணக்கியன்,இ.சிறிநாத்,குகதாசன்,கோடீஸ்வரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பதில் பொதுச்செயலாளர்,
இன்று மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடன் நாங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது அவர்களின் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
34உள்ளுராட்சிமன்றங்களில் நாங்கள் ஆட்சியமைத்திருக்கின்றோம். அதைவிட மற்றைய சபைகளிலே எங்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்கின்றது. எங்களுடைய செயற்பாடுகள் சம்பந்தமாக நாங்கள் முதலிலே ஆராய்ந்திருந்தோம். 
அரசாங்கம் திட்டமிட்டே எங்களுடைய உள்ளுராட்சி சபை தவிசாளர்களையும் நிர்வாகத்தையும் புறக்கணிப்பதாக சகல மாவட்டங்களிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் புறக்கணித்து தேசிய மக்கள் சக்தி முற்றுமுழுதாக தாங்கள் தான் அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதைப்போல அனைத்து மாவட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு கட்சி சார்பிலே கடிதம் ஒன்றை அனுப்பவும் தீர்மானித்திருக்கின்றோம். அத்துடன் பல விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியோடு பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் நாங்கள் கோர இருக்கின்றோம். 
எங்களுடைய கட்சியின் சார்பிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கட்சியின் தலைவரும் நானும் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதங்கள், அறிக்கைகள் அனைத்தும் இன்று மத்திய செயற்குழுவிலே சமர்ப்பிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து அது சம்பந்தமாக கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்த அறுபதாவது கூட்டத் தொடரிலே இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிப்பதற்காக என்று சொல்லி முன்வைக்கப்பட்டிருக்கின்ற முதலாவது வரைபு சம்பந்தமாக நாளையதினம் அங்கே உத்தியோகப்பற்றற்ற கூட்டமொன்று நடைபெறவிருக்கின்றது. அதிலே வேறு விடயங்களை சேர்த்துக்கொள்வது, திருத்துவது சம்பந்தமான விடயங்கள் அங்கே பேசப்படும். இதிலே எங்களுடைய கட்சியின் ஈடுபாடு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பிரித்தானியாவோடு பிரதானமாகவும் …..நாடுகளோடும் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கின்றோம். ஆகையால் என்னென்ன விடயங்கள் முக்கியமானவை, கைவிடப்பட முடியாதவை என்பது சம்பந்தமாக நாங்கள் பேசியிருக்கின்றோம். மற்றைய உறுப்பு நாடுகளோடு நாங்கள் தொடர்ச்சியாக உரையாடலை வைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தக் கூட்டத்திலே வற்புறுத்தப்பட்டிருக்கின்றது. 
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப்பேருக்கும் இந்தப்பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பது மட்டுமல்ல கூட்டாக எங்களுடைய நிலைப்பாடுகளை முடிவாக எடுத்து எந்தெந்த நாடுகளோடு எவரெவர் தொடர்ச்சியாக உறவைப் பேணவேண்டுமென்று வரும் நாட்களிலே சில ஒழுங்குகளை செய்ய இருக்கின்றோம். நாங்கள் எழுதிய கடிதங்களிலே அதுபற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
இன அழிப்புக்கான மனஎண்ணம் வெளிப்படுகின்ற விதமாக பல சாட்சியங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. அதில் பிரதானமானது செம்மணி மனிதப் புதைகுழியாகும். அது சம்பந்தமாக நாங்கள் எழுதியிருக்கின்ற கடிதங்களிலே தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். சர்வதேச ஈடுபாடு அகழ்வுப்பணி தொடங்குகின்ற தருணத்திலிருந்தே இருக்க வேண்டுமென்று ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு மேலதிகமான சர்வதேச நீதிக்கான நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இலங்கை சம்பந்தமான விடயங்களை பாரப்படுத்துவது சம்பந்தமாகவும் உறுப்பு நாடுகளுக்கு தெளிவாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம். 
ஒரு முழுமையான அரசியல் தீர்வு தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக உருவாக வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு வடகிழக்கிலே அதிகூடிய அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். உடனடியாக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை காலந்தாழ்த்தாது நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். சர்வதேச சமூகம் எங்களுடைய கோரிக்கைகள் பலவற்றிற்கு செவி சாய்த்திருக்கின்றார்கள். உள்ளக விசாரணை அவர்கள் வலியுறுத்துவதை நாங்கள் ஏமாற்றமாக சொல்லியிருக்கின்றோம். ஆனால் உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கத்தை உபயோகித்து இலங்கையிலே குற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், சாட்சியங்களை சேகரிக்கின்ற பாதுகாக்கின்ற ஓஸ்லப் என்ற பொறிமுறையிலே எடுக்கப்பட்ட சாட்சியங்களை அதற்கு அந்த நாடுகள் பாவிக்கலாம் என்று மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கின்றார். அது மிகமிக வரவேற்கத்தக்க விடயம்.
ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்ற தேர்தல்,உள்ளுராட்சிமன்ற தேர்தல் இந்த மூன்று தேர்தல் தொடர்பிலும் கட்சியின் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்களுக்கு விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நேரடியாகவே கட்சியின் தீர்மானத்தினை மீறி போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். உள்ளுராட்சிமன்றத்தில் போட்டியிட்ட சிலர் எமது கவனக்குறைவினால் தப்பியுள்ளார்கள்.அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம்கோரி எழுதப்பட்ட கடிதங்களுக்கு சிலர் பதில்வழங்காமல் இருக்கின்றார்கள்,சிலர் பதில் அனுப்பியுள்ளார்கள். பதில் வழங்காதவர்களுக்கு பதில் வழங்க எதுவும் இல்லையென கருதப்பட்டு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு விளக்கம் எழுதாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை அவர்களுக்கு எதிராக எடுப்போம்.கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கை தொடர்பிலும் பேசியிருக்கின்றோம்.