மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம்,மாங்காடு,தேற்றாத்தீவு,களுதாவளை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகின்றது.
இன்று அதிகாலை தேற்றாத்தீவு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாய செய்கைகளை பாதிக்கச்செய்துள்ளதுடன் அறுவடை நிலையிலிருந்த கொச்சிக்காய் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யானையின் அட்டகாசம் காரணமாக கொச்சிச்செய்கை,சோளன்,கச்சான்,கத்தரி போன்ற பல்வேறு பயிர் தோட்டங்களில் சேதமேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான யானையின் அட்டகாசங்கள் தற்போதுதான் இப்பகுதியில் ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கு முன்னர் ஆற்றுக்கு அப்பால் உள்ள கரை பகுதிகளில் இவ்வாறான யானையின் அசம்பாவிதங்கள் இடம் பெற்றதாகவும் இப்போது இந்த பகுதியிலும் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அசமந்த போக்காக செயல் படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுவரை காலமும் யானை தேற்றத்தீவு பகுதிக்குள் வந்ததில்லை எனவும் இதுவே முதல் தடவை எனவும் விவசாயிகள் தெரிவித்ததுடன் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து இழப்பீடுகளை வழங்குவதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பளத்தினை பெற்றுக்கொண்டு தங்களது கடமைகளை சரியாக செய்யவில்லை எனவும் இதன் போது விவசாயிகள் தெரிவித்தனர்.