கொழும்பில் உலகத் தமிழ் & சிங்கள கலைப் பண்பாட்டு விழா: இந்தியா, இலங்கையின் முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்பு

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி இலங்கையின் தலைநகரான கொழும்பில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்வில், இந்தியாவிலிருந்து சுமார் பத்து முன்னணிப் பாடகர்கள் பங்கேற்று, தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாட உள்ளனர். இவர்களுடன், இலங்கையின் ஹட்டன் சலீம் உள்ளிட்ட பிரபல பாடகர்களும் தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்த உள்ளனர்.

இந்தக் கலாச்சார விழா, தமிழ் மற்றும் சிங்கள கலை வடிவங்களை ஒருங்கிணைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அமையப்பெறவுள்ளதுடன். குறிப்பாக, அழிந்துவரும் பாரம்பரியத் தமிழ் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பு நடனங்களை அரங்கேற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில், இலங்கையின் முக்கிய அமைச்சர்களும் சமூகப் பெரியோர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது, உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடத்தின் சர்வதேசத் தலைவர் கலாநிதி எஸ்.எம். ரஷ்மி ரூமி அவர்கள் கூறுகையில், "இந்த விழா, இந்தியா மற்றும் இலங்கையின் கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை இணைக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. அத்துடன் எங்கள் அமைப்பு சார்பாக, எனது தந்தை மறைந்த இஸ்லாமியப் பாடகரும், திரையிசைப் பாடகருமான "சங்கநாத செம்மல் காயில் ஷேக் முகமது" அவர்களின் 'மகா காவியப் புத்தகம்' டிசம்பர் 16ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதோடு அதனை பிரபல எழுத்தாளர் மூதூர் அனஸ் மற்றும் துணை எழுத்தாளர் முகைமினா ஆகியோர் எழுதியுள்ளனர்," என்று தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கையின் கலாச்சாரப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ள இந்த விழா, இரு நாட்டு மக்களின் கலை ஆர்வத்தையும் ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடத்தின்  சர்வதேச அமைப்பின் இலங்கை செயலாளர் பாடகர் ஹட்டன் சலீம் மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடத்தின் 
சர்வதேச அமைப்பின் இலங்கை துணைத்தலைவர் அல்ஹாஜ் முஹம்மது நிசாம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.