பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் பங்குபற்றுதலுடன்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) திகதி இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரது பங்கேற்புடன் இவ் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் போதைப்பொருள் விற்பனையினை தடுப்பது தொடர்பாகவும், மாவட்டத்தில் 600 பொலிஸ் அதிகாரிகள் கடமைக்காக தேவைப்படுமிடத்து 300 பொலிஸ் உத்தியோகத்தர்களே கடமையில் இருப்பது தொடர்பாகவும், மாவட்டத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்களை அமைக்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பாகவும், பாதுகாப்பற்ற நிலையில் பராமரிப்பு குறைபாட்டுடன் மாவட்டத்தில் 706 பெண்கள் மற்றும் சிறுவர்கள் காணப்படுவது தொடர்பாகவும் மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான இடங்களில் காணப்படும் பாதுகாப்பு படையினர் முகாமிட்டிருக்கும் இடங்களை விடுவிக்க வேண்டியதன் அவசியம், பொலிஸ் அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட மேலும் பல மக்கள் நலன் சார்ந்த விடையங்கள் தொடர்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் குறித்த விடையங்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக கையள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும் இதன் போது ஆரையம்பதி தொடக்கம் களுவாஞ்சிகுடி வரையான மிக பாரிய இடப்பரப்பை கொண்ட பகுதிகளை நிருவகிப்பதற்காக ஆரையம்பதியில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றை நிறுவுதற்கான அனுமதியும் இதன் போது அமைச்சர் வழங்கியதுடன், 50 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் மாதத்திற்குள் மாவட்டத்திற்கு நியமிப்பதாகவும் உறுதிமொழியளித்திருந்தார்.
அத்தோடு போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கும் குழுக்களை நியமிப்பதற்கான ஆலோசனையினை வழங்கியதுடன், மாவட்டத்தில் 706 சிறுவர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதனால் இவர்களது எதிர்கால நலனை கருத்திற் கொண்டு இவர்களுக்கு தேவையான அனைத்து விடையங்களையும் முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், மாவட்டத்தில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை தமக்கு வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந், திருமதி. நவருபரஞ்ஜினி முகுத்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரீ நிர்மலராஜ், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.