கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலக மட்டங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் விசேட பயிற்சி நிகழ்வானது ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) இடம் பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை கிராம மட்டத்திற்கு பரவலாக்கும் செயற்றிட்டம் தொடர்பான விசேட பயிற்சிகள் அதிகாரிகளுக்கு வழக்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி நிதியின் பணத்தை பெற்றுக் கொள்வதற்கு நோயாளிகள் கொழும்பு நகரிற்கு சென்று தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தநிலையினை மாற்றி மக்கள் காலடிக்கு இச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி நிதியத்தினுடாக பாதிக்கப்பட்ட நோயாளருக்கான மருத்துவ நிதி உதவி, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், புலமைப் பரிசில்கள், சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களை கெளரவித்தல், காட்டு யானையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற பல சேவைகளை வழங்கி வருகின்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையில் இலகுவாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் திருமதி பி.எச். ஜயசேகர கொலம்பகே, சிரேஷ்ட உதவி செயலாளர் பி.ஆர்.பிரசாத் பெரேரா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள்,
ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர் குழுவினர் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.