முத்தமிழ் வித்தகரின் 12அடி உயிரமான கருங்கல் சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு

உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை இன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டது.சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் ஏற்பாட்டிலும் தொழிலதிபர் மு.செல்வராசாவின் முயற்சியினாலும் சுவாமி விபுலானந்தருக்கு முதலாவது கற்சிலையாக இதுதிறந்துவைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன்,மட்டக்கள்பபு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர்கள்,முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் யாழ் மற்றும் யாழ் நூல் என்பனவும் திறந்துவைக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் நினைவுக்கல் படிகமும் திறந்துவைக்கப்பட்டது.